வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

காங்கிரசின் திமிர்

காங்கிரசுக் கட்சியில் பக்தவச்சலம் என்றொருவர் இருந்தார். காமராசருக்குப் பின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தார். இந்தி ஒன்றே ஆட்சி மொழி என்ற சட்டம் நடைமுறைக்கு வந்த 1965இல் அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சர். இந்தித் திணிப்பை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த போராட்டத்தை கடுமையான அடக்குமுறையால் நசுக்கிட முயன்றவர் அவர். இந்தியாவின் படை நேரடியாக இறங்கி அந்த மாணவர் போராட்டத்தை ஒடுக்கிட முனைந்தது. இன்றைய முதல்வர் கலைஞருக்கு இரும்புக் கரம் கொண்டு அடக்குவதைக் கற்றுத் தந்த ஆசான் அவர்தானாம். இதை இன்றைய முதல்வரே அவரின் புதைமேடையை திறந்து வைத்த போது சொன்னது. அப்படிப் பட்ட கொடுமைக் காரரான பக்தவச்சலத்திற்கு ஒரு பெயர்த்தி. செயந்தி நடராசன் என்பது அவரின் பெயர். இப்போது தில்லியில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்து வருகிறார். அண்மையில் அவர், “இலங்கைச் சிக்கலில் இதற்கு மேல் இந்தியா எதுவும் செய்ய இயலாது” என்று திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார்.

தமிழர்களை அழிக்கப் போர்க் கருவிகளைக் கொடுத்து, சிங்களப் படைக்கு பயிற்சி கொடுத்து, ஆளனுப்பி குண்டு போட வைத்து, உளவு பார்த்து இப்படி எல்லாவற்றையும் செய்து முடித்தபின் இன்னும் என்னதான் செய்ய இருக்கிறது?

இலங்கை அரசைப் பார்த்துச் சொல்ல வேண்டியதை தமிழர்களைப் பார்த்துச் சொல்லும் இவர் பக்தவச்சலத்தின் உண்மையான பிறங்கடைதான். ஒரு இனமே அழிந்து கொண்டு இருக்கும் நிலையிலும் இப்படி திமிரோடு பேச காங்கிரசாரைத் தவிர யாருக்குத்தான் மனம் வரும்?

1 கருத்து:

S.Rengasamy - cdmissmdu சொன்னது…

என்னை தொடர்பு கொண்டதற்கு மிக்க நன்றி. பாவலரேருவின் கம்பீரமான படமும் கவிதைகளும் உவப்பாக இருந்தது. உங்களுடைடைய தளத்திற்கு இனி அடிக்கடி வந்து செல்வேன்

கருத்துரையிடுக