வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

இவர்கள் வேறு காந்தியின் வாரிசுகள்

மோகன்தாசு கரம்சந்து காந்தி என்றொருவர் இருந்தார். அவரை மகாத்மா என்று இந்திய மக்கள் அழைப்பார்கள். இந்திய நாட்டு பணத்தாள்கள் அனைத்திலும் அவரின் பொக்கை வாய்ச் சிரிப்பு இருக்கும். அவர் தமது சிறுவயதில் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து உண்மையே பேசுவேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு அதன்படி வாழ்ந்தார் என்றும் கூறுவர். அவர் கட்டிக் காத்த காங்கிரசு என்றழைக்கப் படும் பேராயக் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையின் தலைவராக இருப்பவர் கே.டி. தங்கபாலு. அண்மையில் இவர் செய்தியாளர்களிடம் இந்திய அரசு எவ்வித படைத்துறை உதவியையும் இலங்கை அரசுக்கு வழங்கவில்லை என்று தெரிவித்தார்.

போர்க் கருவிகள் பல ஆண்டுகளாகவே தூத்துக்குடி துறைமுகம் வழியாகச் செல்கின்றன என்ற உண்மையை இரண்டாண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு உளவுத் துறைக் காவலர்கள் கண்டறிந்தனர். இச் செய்தி அப்போதே தமிழக மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

அதன் பின்னர் தொடர்ச்சியாக சிங்களப் படையினருக்கு கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் பயிற்சி அளிக்கப் பட்ட செய்தி வெளியானது. இது குறித்து இந்திய அரசை நெருக்கிய போது அண்டை நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணம் பெற்றுக் கொண்டு பயிற்சி அளிப்பதாகவும் இது வழக்கமாக எல்லா நாடுகளுக்கும் செய்கின்ற உதவிதான் என்றும் சொல்லப்பட்டது. அப்படியென்றால் பாகித்தானுக்கும் அவ்வுதவி வழங்கப் படுமா என்று தமிழக மக்கள் இடையிலிருந்து எழுந்த கேள்விக்கு இன்று வரை விடையேதும் இல்லை.

அதையடுத்து இரேடார் வழங்கப் பட்ட செய்தி வெளியானது. இப்படி அடுக்கடுக்காக இலங்கைக்கு தாம் செய்து வரும் உதவிகள் அம்பலப்பட்டுப் போன நிலையில் வெளிப்படையாகவே போர்க் கருவிகள் வாங்குவதற்கென்றே நானூறு கோடி உருவாக்களை இந்திய அரசு சிங்கள அரசுக்கு வாரி வழங்கி தமிழக மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டது.

இன்றைக்கு பேராயக் கட்சி மீது தமிழக மக்கள் காட்டி வரும் வெறுப்புணர்வு சற்றே அந்த காங்கிரசாரின் எருமை மாட்டுத் தோல்களுக்கு உறைக்கத் தொடங்கி யுள்ளது போலும். அதனால்தான் முழுப் பூசணியை சோற்றில் மறைப்பது போல் தங்கபாலு இந்தியா, இலங்கைப் படைக்கு எந்த உதவியும் வழங்க வில்லை என்று கூறுகிறார். கேட்கிறவன் கேணையனாக இருந்தால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொல்வார்கள். தமிழர்களை அப்படிக் கருதி விட்டார் போலும் தங்கபாலு.

“சத்திய மேவ செயதே” அதாவது “வாய்மையே வெல்லும்” என்று எங்கும் முழங்குவோர் அச் சத்தியத்தைக் காக்க எடுக்கும் முயற்சிகளைக் கண்டு நகைக்கத்தான் தோன்றுகிறது.

இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் என்ன பொக்கை வாய்க் கிழவன் காந்தியின் வழி வந்தவர்களா? போபர்சு பீரங்கி வாங்கி ஊழல் செய்து பிடிபட்டு நான் திருடனில்லை என்று புலம்பித் திரிந்த இராசீவ்காந்தியின் வழி வந்தவர்கள்தாமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக