“இந்தியாவைப் போன்ற ‘சமஷ்டி’ அரசு ஒன்றை இலங்கையில் அமைத்தால் இனப்போராட்டம் முடிவுக்கு வந்து விடும்” என்று ஆனந்த சங்கரி போன்ற இரண்டகர்கள் கூறிக் கொண்டுள்ளனர். இந்தியாவின் ‘சமஷ்டி’ எந்தளவுக்கு பல்லிளித்துக் கொண்டிருக்கிறது என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் நன்றாகக் காட்டி வருகின்றன.
இலங்கையில் வன்னிப் பகுதியில் வான்குண்டு மழை பெய்து மக்களைப் படுகொலை செய்து வந்த இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் வெகுண்டெழுந்த நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இலங்கையில் போரை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அவ்வாறு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை எனில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று எச்சரிக்கவும் செய்தார்கள்.
அந்தத் தீர்மானத்தோடு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மயிலை மாங்கொல்லையில் நடுவண் அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருப்பதாகவும் அது தமக்கு நிறைவை அளிப்பதாகவும் சொல்லி தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டார். அனைத்துக் கட்சித் தீர்மானத்தை நிறைவேற்ற இந்தியா முன்வராத நிலையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து போரை நிறுத்த வேண்டும் என்று ஓர் தீர்மானத்தை நிறைவேற்றி இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தது.
தமிழ்நாட்டின் மக்கள் படிநிகராளிகள் அனைவரும் ஒரே குரலில் ஒலித்த அத் தீர்மானத்தையும் இந்தியா காலில் போட்டு மிதித்துக் கொண்டு கிளிநொச்சியை சிங்களப் படை எப்படி வெற்றி கொள்வது என்று அப்படைக்கு பாடம் எடுக்க இந்தியத் தளபதிகளை அனுப்பி வைத்தது.
இதோ இந்தக் கட்டுரை எழுதப் படும் வரை இந்தியா போரை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சார்க்கு நாடுகளின் மாநாடு தொடர்பாக இலங்கைக்குச் சென்று வந்த வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் அங்கிருந்த போதே போரை நிறுத்த இந்தியா வற்புறுத்த வில்லை என்றும், அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் கூடாது என்று மட்டுமே கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். இப்படி தமிழக மக்களின் உணர்வுகள் இந்திய அரசினால் மிகவும் கேவலமாக மதிக்கப் படுகின்றது. இலங்கையிலிருந்து தமிழகம் வழியாக தில்லி சென்ற அவர் தமிழக முதல்வரை மரியாதைக்குக் கூட சந்திக்கவில்லை. இது தமிழக மக்களுக்குப் பேரதிர்ச்சியை அளிப்பதாகும் என்று ஊடகங்கள் தெரிவித்தன.
இந்திய அரசின் அதிகாரி ஒருவர் கூட மதிக்க வேண்டிய அளவுக்கு தமிழக முதல்வர் பதவி அதிகாரம் உடையது இல்லை என்ற உண்மையை இந்நிகழ்ச்சி மூலம் உறுதிப் படுத்திச் சென்றிருக்கிறார் சிவசங்கர் மேனன்.
ஈழத் தமிழர் சிக்கல் என்பது தமிழக மக்களோடு உறவுடைய சொந்தங்களின் சிக்கல் என்பதோ அந்தச் சிக்கலில் தமிழக மக்களின் சார்பில் ஆண்டு கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டு முதலமைச்சரைச் சந்தித்துக் கருத்து கேட்க வேண்டும் என்றோ இந்திய அரசோ, இந்திய அரசின் அதிகாரிகளோ எண்ணுவதே இல்லை.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நிறுத்தப்படும் என்ற உறுதி மொழியை சிங்கள அரசு அளித்துள்ளது என்று நிறைவடைந்த இந்திய அரசு அந்த உறுதி மொழி எந்தளவுக்கு நடைமுறைப் படுத்தப் படுகிறது என்பதைக் கண்காணிக்கிறதா?
தொடர்ந்து தமிழக மீனவர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். சாகடிக்க சிங்களப் படைக்கு கருவிகள் அளித்து மேலும் புதிய கருவிகள் வாங்க பணமும் அளித்து தமிழக மக்களின் உரிமையையும் இறையாண்மையையும் கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. இப்படியான ‘சமஷ்டி’யைத் தான் ஆனந்த சங்கரிகள் விரும்புகின்றார்கள் போலும்.
“என் உயரம் எனக்குத் தெரியும்”, “நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்” என்றெல்லாம் புலம்புகின்ற நிலையில் உள்ளார் தமிழக முதல்வர். அவர் அந்த நாற்காலியில் நீடிப்பதற்குச் செய்து வரும் இரண்டகங்களைப் போல் செய்து அதே போன்ற நாற்காலியில் அமர்ந்து விடலாம் என்று ‘சமஷ்டி’ கோரும் வீடணத் தமிழர்கள் வேண்டுகின்றனர் போலும்.
இந்தியாவிற்குள் தமிழினம் அடிமைப் பட்டுள்ளது. சமன்மையாக வாழவில்லை. இந்திய அரசு ஒரு கூட்டாட்சியே இல்லை. கூட்டாட்சி என்று ஒப்புக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் நடைமுறையில் ஒற்றையாட்சி முறையே நிலவி வருகிறது.
மாநில அரசு என்றொரு நிலை உள்ளதே என்று கேட்டால் அதிகாரமற்ற வெறும் நிர்வாக நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பாகவே மாநில அரசுகள் இயங்கி வருகின்றன.
காவல் துறை என்பது இந்திய அரசியல் அமைப்புப் படி மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் வருகின்ற ஒன்று. மும்பைத் தாக்குதலுக்குப் பின் அவ்வதிகாரத்தை குறுக்கு வழியில் இந்தியா இன்றைக்கு தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது. உள்ளாட்சி மன்றங்கள், ஊராட்சிகள் மாநில அதிகாரத்திற்குள் வருவன.
அவற்றை இராசீவ்காந்தி தன் ஆட்சிக் காலத்திலேயே பஞ்சாயத்துராச்சு சட்டத்தின் மூலமும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வழியாக நேரடியாக ஊராட்சிகளுக்கு நிதி வழங்குவது என்பதன் மூலமும் இந்தியாவின் கைக்குள் கொண்டு வந்து விட்டது இந்தியா.
கல்வியை இந்திராகாந்தி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்குக் கொண்டு சென்று விட்டார்.
இப்படி அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சில்லறை அதிகாரங்களைக் கூட படிப்படியாக பறித்துக் கொண்டிருக்கின்றது இந்திய அரசு.
இந்த நிலையில் ஈழத்தில் இந்தியாவைப் போன்ற கூட்டாட்சி வேண்டும் என்று கேட்பது ஈழத்தமிழர்களுக்குச் செய்யும் இரண்டகம் இல்லையா?
ஈழமக்கள் உணர்ந்துள்ளார்கள். அவர்கள் விடுதலை வேண்டி நிற்கும் விடுதலைப் புலிகளைத்தான் நம்பியிருக்கின்றனர்.
கருணாக்களும், பிள்ளையான்களும், ஆனந்த சங்கரிகளும் அம்மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிங்கள ஆட்சியாளர்களால் தத்தெடுக்கப் பட்டுள்ளனர்.
இந்திய அரசு தத்தெடுத்த வரதராசப் பெருமாளுக்கு நேர்ந்ததுதான் இவர்களுக்கும் என்பதை காலம் காட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக