வெள்ளி, 13 பிப்ரவரி, 2009


சிங்கள அரசுக்கு போர்க்கருவிகளை வழங்கி
உளவு பார்த்து,
ஆளணிகளை அனுப்பி,
படை நடத்தும் தொழில்நுட்பங்களை அளித்து
தமிழினப் படுகொலை நிகழ்த்தும்
சோனியா.

இராசீவ்காந்தியின் வழியில் சோனியா

இந்திய அரசு சிங்கள அரசோடு கூடிக் குலவிக் கொண்டு அங்கு போராடும் மக்களைக் கொன்றொழிப்பது புதிதன்று. மலையக மக்களை சாத்திரி காலத்தில் நாடற்றவர்கள் ஆக்கியது. பின்னர் வந்த இந்திரா அங்கு தம் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருந்த சிங்கள உழைக்கும் மக்களின் அமைப்பாக இருந்த சனதா விமுக்த பெரமுன என்ற அமைப்பை (இன்றைய சனதா விமுக்த அமைப்பின் கொள்கையே வேறு) இந்தியப் படையை அனுப்பி முற்ற முழுதாக அழித்தார். அவர் மகன் இராசீவ்காந்தியோ ஈழவிடுதலைப் போரின் முன்னணிப் படையான விடுதலைப் புலிகளை அழிக்க நினைத்து தாமழிந்து போனார்.

இந்திராவின் மருமகளும், இராசீவின் மனைவியும், போபர்சு குற்றவாளியான குவரோச்சியின் உறவினருமான சோனியா இராசீவின் வழியில் இன்று படையினரையும் படைக்கருவிகளையும் சிங்கள அரசுக்குத் தாராளமாக அளித்து வருகிறார். 87இல் தமிழகத் தெருக்களில் அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பப்பட்ட அமளிப் படையின் நடமாட்டத்தைக் கண்டு தமிழக மக்கள் கொதித்தெழுந்தனர். முகஞ்சுளித்தனர்.

இன்று அந்தக் காட்சிகள் மீண்டும் அரங்கேறத் தொடங்கி உள்ளது. இந்தியப் படையின் பீரங்கிகள் (இவற்றை இந்தியர்கள் குடியரசு நாள் அணிவகுப்பின் போது மட்டுமே பார்ப்பர்.) ஈரோடை வழியாகச் கொச்சி சென்று அங்கிருந்து சிங்களனின் கைக்குப் போய் சேர்ந்துள்ளன. அணியணியாக அந்நிகழ்வு இனி தொடரும் என எதிர்பார்க்கலாம். ஆனாலும் போர்க்களத்தில் அந்த பீரங்கிகள் வெடிக்குமா என்று தெரியாது. சோனியா அம்மையார் அனுப்புகின்ற பீரங்கி அல்லவா? எவ்வளவு கையூட்டில் வாங்கியதோ? அந்த பீரங்கிகள் வெடிக்கின்றவோ இல்லையோ நாளை ஈழப் போர்க்களத்தில் தோல்வியைத் தழுவும் போது பழியை இந்த பீரங்கிகள் மீதுதான் சிங்கள அரசு போடப் போகிறது.

ஏற்கனவே புலிகளின் போர் வானூர்தியைக் கண்டறிய வக்கற்ற சிங்களம் இந்தியா கொடுத்த இரேடார் தரம் குறந்தது; அதனால்தான் கண்டறிய முடியவில்லை என்று சொன்னது அல்லவா? அதுபோலவே இப்பொழுதும் நடக்கும். சோனியா அம்மணி அவர் கணவர் வழியில் நடையிடுவதை யார்தான் தடுக்க முடியும். அப்படி நடையிடும் போது ஏற்படும் பழிகளும் அவர்களையே சாரும்.

காங்கிரசின் திமிர்

காங்கிரசுக் கட்சியில் பக்தவச்சலம் என்றொருவர் இருந்தார். காமராசருக்குப் பின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தார். இந்தி ஒன்றே ஆட்சி மொழி என்ற சட்டம் நடைமுறைக்கு வந்த 1965இல் அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சர். இந்தித் திணிப்பை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த போராட்டத்தை கடுமையான அடக்குமுறையால் நசுக்கிட முயன்றவர் அவர். இந்தியாவின் படை நேரடியாக இறங்கி அந்த மாணவர் போராட்டத்தை ஒடுக்கிட முனைந்தது. இன்றைய முதல்வர் கலைஞருக்கு இரும்புக் கரம் கொண்டு அடக்குவதைக் கற்றுத் தந்த ஆசான் அவர்தானாம். இதை இன்றைய முதல்வரே அவரின் புதைமேடையை திறந்து வைத்த போது சொன்னது. அப்படிப் பட்ட கொடுமைக் காரரான பக்தவச்சலத்திற்கு ஒரு பெயர்த்தி. செயந்தி நடராசன் என்பது அவரின் பெயர். இப்போது தில்லியில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்து வருகிறார். அண்மையில் அவர், “இலங்கைச் சிக்கலில் இதற்கு மேல் இந்தியா எதுவும் செய்ய இயலாது” என்று திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார்.

தமிழர்களை அழிக்கப் போர்க் கருவிகளைக் கொடுத்து, சிங்களப் படைக்கு பயிற்சி கொடுத்து, ஆளனுப்பி குண்டு போட வைத்து, உளவு பார்த்து இப்படி எல்லாவற்றையும் செய்து முடித்தபின் இன்னும் என்னதான் செய்ய இருக்கிறது?

இலங்கை அரசைப் பார்த்துச் சொல்ல வேண்டியதை தமிழர்களைப் பார்த்துச் சொல்லும் இவர் பக்தவச்சலத்தின் உண்மையான பிறங்கடைதான். ஒரு இனமே அழிந்து கொண்டு இருக்கும் நிலையிலும் இப்படி திமிரோடு பேச காங்கிரசாரைத் தவிர யாருக்குத்தான் மனம் வரும்?

இவர்கள் வேறு காந்தியின் வாரிசுகள்

மோகன்தாசு கரம்சந்து காந்தி என்றொருவர் இருந்தார். அவரை மகாத்மா என்று இந்திய மக்கள் அழைப்பார்கள். இந்திய நாட்டு பணத்தாள்கள் அனைத்திலும் அவரின் பொக்கை வாய்ச் சிரிப்பு இருக்கும். அவர் தமது சிறுவயதில் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து உண்மையே பேசுவேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு அதன்படி வாழ்ந்தார் என்றும் கூறுவர். அவர் கட்டிக் காத்த காங்கிரசு என்றழைக்கப் படும் பேராயக் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையின் தலைவராக இருப்பவர் கே.டி. தங்கபாலு. அண்மையில் இவர் செய்தியாளர்களிடம் இந்திய அரசு எவ்வித படைத்துறை உதவியையும் இலங்கை அரசுக்கு வழங்கவில்லை என்று தெரிவித்தார்.

போர்க் கருவிகள் பல ஆண்டுகளாகவே தூத்துக்குடி துறைமுகம் வழியாகச் செல்கின்றன என்ற உண்மையை இரண்டாண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு உளவுத் துறைக் காவலர்கள் கண்டறிந்தனர். இச் செய்தி அப்போதே தமிழக மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

அதன் பின்னர் தொடர்ச்சியாக சிங்களப் படையினருக்கு கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் பயிற்சி அளிக்கப் பட்ட செய்தி வெளியானது. இது குறித்து இந்திய அரசை நெருக்கிய போது அண்டை நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணம் பெற்றுக் கொண்டு பயிற்சி அளிப்பதாகவும் இது வழக்கமாக எல்லா நாடுகளுக்கும் செய்கின்ற உதவிதான் என்றும் சொல்லப்பட்டது. அப்படியென்றால் பாகித்தானுக்கும் அவ்வுதவி வழங்கப் படுமா என்று தமிழக மக்கள் இடையிலிருந்து எழுந்த கேள்விக்கு இன்று வரை விடையேதும் இல்லை.

அதையடுத்து இரேடார் வழங்கப் பட்ட செய்தி வெளியானது. இப்படி அடுக்கடுக்காக இலங்கைக்கு தாம் செய்து வரும் உதவிகள் அம்பலப்பட்டுப் போன நிலையில் வெளிப்படையாகவே போர்க் கருவிகள் வாங்குவதற்கென்றே நானூறு கோடி உருவாக்களை இந்திய அரசு சிங்கள அரசுக்கு வாரி வழங்கி தமிழக மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டது.

இன்றைக்கு பேராயக் கட்சி மீது தமிழக மக்கள் காட்டி வரும் வெறுப்புணர்வு சற்றே அந்த காங்கிரசாரின் எருமை மாட்டுத் தோல்களுக்கு உறைக்கத் தொடங்கி யுள்ளது போலும். அதனால்தான் முழுப் பூசணியை சோற்றில் மறைப்பது போல் தங்கபாலு இந்தியா, இலங்கைப் படைக்கு எந்த உதவியும் வழங்க வில்லை என்று கூறுகிறார். கேட்கிறவன் கேணையனாக இருந்தால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொல்வார்கள். தமிழர்களை அப்படிக் கருதி விட்டார் போலும் தங்கபாலு.

“சத்திய மேவ செயதே” அதாவது “வாய்மையே வெல்லும்” என்று எங்கும் முழங்குவோர் அச் சத்தியத்தைக் காக்க எடுக்கும் முயற்சிகளைக் கண்டு நகைக்கத்தான் தோன்றுகிறது.

இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் என்ன பொக்கை வாய்க் கிழவன் காந்தியின் வழி வந்தவர்களா? போபர்சு பீரங்கி வாங்கி ஊழல் செய்து பிடிபட்டு நான் திருடனில்லை என்று புலம்பித் திரிந்த இராசீவ்காந்தியின் வழி வந்தவர்கள்தாமே.

வியாழன், 12 பிப்ரவரி, 2009

இந்தியாவைப் போன்ற கூட்டாட்சி தேவையா?

“இந்தியாவைப் போன்ற ‘சமஷ்டி’ அரசு ஒன்றை இலங்கையில் அமைத்தால் இனப்போராட்டம் முடிவுக்கு வந்து விடும்” என்று ஆனந்த சங்கரி போன்ற இரண்டகர்கள் கூறிக் கொண்டுள்ளனர். இந்தியாவின் ‘சமஷ்டி’ எந்தளவுக்கு பல்லிளித்துக் கொண்டிருக்கிறது என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் நன்றாகக் காட்டி வருகின்றன.

இலங்கையில் வன்னிப் பகுதியில் வான்குண்டு மழை பெய்து மக்களைப் படுகொலை செய்து வந்த இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் வெகுண்டெழுந்த நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இலங்கையில் போரை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அவ்வாறு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை எனில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று எச்சரிக்கவும் செய்தார்கள்.

அந்தத் தீர்மானத்தோடு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மயிலை மாங்கொல்லையில் நடுவண் அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருப்பதாகவும் அது தமக்கு நிறைவை அளிப்பதாகவும் சொல்லி தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டார். அனைத்துக் கட்சித் தீர்மானத்தை நிறைவேற்ற இந்தியா முன்வராத நிலையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து போரை நிறுத்த வேண்டும் என்று ஓர் தீர்மானத்தை நிறைவேற்றி இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தது.
தமிழ்நாட்டின் மக்கள் படிநிகராளிகள் அனைவரும் ஒரே குரலில் ஒலித்த அத் தீர்மானத்தையும் இந்தியா காலில் போட்டு மிதித்துக் கொண்டு கிளிநொச்சியை சிங்களப் படை எப்படி வெற்றி கொள்வது என்று அப்படைக்கு பாடம் எடுக்க இந்தியத் தளபதிகளை அனுப்பி வைத்தது.

இதோ இந்தக் கட்டுரை எழுதப் படும் வரை இந்தியா போரை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சார்க்கு நாடுகளின் மாநாடு தொடர்பாக இலங்கைக்குச் சென்று வந்த வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் அங்கிருந்த போதே போரை நிறுத்த இந்தியா வற்புறுத்த வில்லை என்றும், அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் கூடாது என்று மட்டுமே கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். இப்படி தமிழக மக்களின் உணர்வுகள் இந்திய அரசினால் மிகவும் கேவலமாக மதிக்கப் படுகின்றது. இலங்கையிலிருந்து தமிழகம் வழியாக தில்லி சென்ற அவர் தமிழக முதல்வரை மரியாதைக்குக் கூட சந்திக்கவில்லை. இது தமிழக மக்களுக்குப் பேரதிர்ச்சியை அளிப்பதாகும் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

இந்திய அரசின் அதிகாரி ஒருவர் கூட மதிக்க வேண்டிய அளவுக்கு தமிழக முதல்வர் பதவி அதிகாரம் உடையது இல்லை என்ற உண்மையை இந்நிகழ்ச்சி மூலம் உறுதிப் படுத்திச் சென்றிருக்கிறார் சிவசங்கர் மேனன்.

ஈழத் தமிழர் சிக்கல் என்பது தமிழக மக்களோடு உறவுடைய சொந்தங்களின் சிக்கல் என்பதோ அந்தச் சிக்கலில் தமிழக மக்களின் சார்பில் ஆண்டு கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டு முதலமைச்சரைச் சந்தித்துக் கருத்து கேட்க வேண்டும் என்றோ இந்திய அரசோ, இந்திய அரசின் அதிகாரிகளோ எண்ணுவதே இல்லை.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நிறுத்தப்படும் என்ற உறுதி மொழியை சிங்கள அரசு அளித்துள்ளது என்று நிறைவடைந்த இந்திய அரசு அந்த உறுதி மொழி எந்தளவுக்கு நடைமுறைப் படுத்தப் படுகிறது என்பதைக் கண்காணிக்கிறதா?

தொடர்ந்து தமிழக மீனவர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். சாகடிக்க சிங்களப் படைக்கு கருவிகள் அளித்து மேலும் புதிய கருவிகள் வாங்க பணமும் அளித்து தமிழக மக்களின் உரிமையையும் இறையாண்மையையும் கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. இப்படியான ‘சமஷ்டி’யைத் தான் ஆனந்த சங்கரிகள் விரும்புகின்றார்கள் போலும்.

“என் உயரம் எனக்குத் தெரியும்”, “நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்” என்றெல்லாம் புலம்புகின்ற நிலையில் உள்ளார் தமிழக முதல்வர். அவர் அந்த நாற்காலியில் நீடிப்பதற்குச் செய்து வரும் இரண்டகங்களைப் போல் செய்து அதே போன்ற நாற்காலியில் அமர்ந்து விடலாம் என்று ‘சமஷ்டி’ கோரும் வீடணத் தமிழர்கள் வேண்டுகின்றனர் போலும்.

இந்தியாவிற்குள் தமிழினம் அடிமைப் பட்டுள்ளது. சமன்மையாக வாழவில்லை. இந்திய அரசு ஒரு கூட்டாட்சியே இல்லை. கூட்டாட்சி என்று ஒப்புக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் நடைமுறையில் ஒற்றையாட்சி முறையே நிலவி வருகிறது.

மாநில அரசு என்றொரு நிலை உள்ளதே என்று கேட்டால் அதிகாரமற்ற வெறும் நிர்வாக நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பாகவே மாநில அரசுகள் இயங்கி வருகின்றன.

காவல் துறை என்பது இந்திய அரசியல் அமைப்புப் படி மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் வருகின்ற ஒன்று. மும்பைத் தாக்குதலுக்குப் பின் அவ்வதிகாரத்தை குறுக்கு வழியில் இந்தியா இன்றைக்கு தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது. உள்ளாட்சி மன்றங்கள், ஊராட்சிகள் மாநில அதிகாரத்திற்குள் வருவன.
அவற்றை இராசீவ்காந்தி தன் ஆட்சிக் காலத்திலேயே பஞ்சாயத்துராச்சு சட்டத்தின் மூலமும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வழியாக நேரடியாக ஊராட்சிகளுக்கு நிதி வழங்குவது என்பதன் மூலமும் இந்தியாவின் கைக்குள் கொண்டு வந்து விட்டது இந்தியா.

கல்வியை இந்திராகாந்தி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்குக் கொண்டு சென்று விட்டார்.

இப்படி அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சில்லறை அதிகாரங்களைக் கூட படிப்படியாக பறித்துக் கொண்டிருக்கின்றது இந்திய அரசு.

இந்த நிலையில் ஈழத்தில் இந்தியாவைப் போன்ற கூட்டாட்சி வேண்டும் என்று கேட்பது ஈழத்தமிழர்களுக்குச் செய்யும் இரண்டகம் இல்லையா?

ஈழமக்கள் உணர்ந்துள்ளார்கள். அவர்கள் விடுதலை வேண்டி நிற்கும் விடுதலைப் புலிகளைத்தான் நம்பியிருக்கின்றனர்.

கருணாக்களும், பிள்ளையான்களும், ஆனந்த சங்கரிகளும் அம்மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிங்கள ஆட்சியாளர்களால் தத்தெடுக்கப் பட்டுள்ளனர்.

இந்திய அரசு தத்தெடுத்த வரதராசப் பெருமாளுக்கு நேர்ந்ததுதான் இவர்களுக்கும் என்பதை காலம் காட்டும்.