அன்புள்ள அப்பா, வணக்கம்.
சற்றுமுன் (29.09.2015
விடியல் 4) விழித்த நிலையில் நல்லிசை அமிழ்தின்
எதிர்காலம் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் மென்மையான ஆனால் அழுத்தமான
குரலில் ‘முகிலப்பா’ என்றீர்கள்.
நான் அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் விழிப்பிலும்
ஒரு மயக்கநிலையில் இருந்ததை உணர்ந்தேன். உங்கள் குரல் அம்மயக்கத்திலிருந்து
முழு விழிப்பு நிலைக்குத் தள்ளியது. மீண்டும் ஒருமுறை தாங்கள்
அழைக்கமாட்டீர்களா என்று பழையபடி மயக்க நிலைக்கே திரும்ப மனம் விழைந்த போதிலும் செயல்
கூடவில்லை.
அப்பா, ஏனப்பா இப்படி எம்மை இருந்தும் இல்லாத இரண்டுங்கெட்டான் நிலைக்குத் தள்ளி விட்டீர்கள்.
அன்றைக்கு மருத்துவர் விமுனாமூர்த்தி ஐயா ‘பாலசிங்கத்திற்கு
நினைவேந்தல் நிகழ்த்தினோம், திருச்சி சவுந்திரராசனுக்கு நடத்தினோம்.
புலவருக்கு நடத்தினோம். ஆனால் முற்போக்குச் சமூகநீதிப்
பேரவையால் ஐயா தமிழ்மணிக்கு நடத்த முடியவில்லை. ஏனெனில் நாங்கள்
அவரை இழந்ததாக இன்னும் நினைக்க முடியவில்லை’ என்று சொன்னாரே,
அதே மன உணர்வு எம் எல்லோருள்ளும் இருந்து, இருப்பு
நிலையை ஏற்றுக் கொள்ளத் தடை செய்கின்றதே, ஏன் அப்பா? சரி, அந்த கனவுநிலையாவது தொடர்ந்து வந்து இன்பம் அளிப்பதாக
இருந்திடக் கூடாதா? விட்டு விட்டு கலைந்து நெடுந் துன்பத்தை ஏனப்பா
அளிக்கிறது?
முகிலப்பா என்ற அந்த
இனிய சொல்லை என்னை அழைக்கின்ற விளியென்றே பல காலமும் நினைத்திருந்தேன். தாத்தா, பாட்டி படத்தை வரைந்து தர செயங்கொண்டத்தில் தாமு
ஐயாவைப் பார்க்கின்ற நேரத்தில்தான் என்னில் நீங்கள் உங்கள் தந்தையைக் காண்கின்றீர்கள்
என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன். உங்கள் அன்னையை தமிழிசையில்
காண்பதை நாங்கள் அனைவரும் சிறுவயது முதல் அறிந்துதான் இருந்தோம் என்றாலும் தந்தையை
என்னில் காண்பதை உணர்ந்த நேரம் அதுதான். அதற்கு முன் பல முறை
தாங்கள் புரட்டாசி மூன்றாம் காரியன்று பிறந்த தாத்தாவையும் நான் பிறந்த புரட்டாசி மூன்றாம்
காரியையும் இணைத்து கூறிய போதெல்லாம் அதை உணர முடியவில்லை. என்
பதிமூன்றாம் பிறந்தநாளன்று உலகப் பெரும் விஞ்ஞானிகள் என்ற நூலை அன்பளிப்பாக அளித்தீர்கள்.
அந்நூலில் முதல் பக்கத்தில் ‘பிறப்பெடுத்தாய்;
பரம்பொருள் கூறாய்; பிள்ளையெனும் உறவும் தந்தாய்’
எனத்தொடங்கும் வெண்பாவால் வாழ்த்தியிருந்தீர்கள். உறவும் என்பதில் உள்ள ‘உம்’மை என்னவென்று
அன்று தெரியவில்லை. இன்றுதான் உணர முடிகிறது. அதேபோல் உங்கள் அன்பிற்குரிய செல்லக்குட்டி ‘இனிக்குட்டி’தான் என்பதை அந்த விளியிலேயே பொதிந்து வைத்திருந்தீர்கள். நேரில் நேயத்தோடு அழைப்பதில் மட்டுமல்லாது மிகு தொலைவில் மதுரையில் இருந்த
போதும், திருச்சியில் இருந்த போதும், பாளையில்
இருந்தபோதும் ‘முகிலப்பாவும், இனிக்குட்டியும்’
எங்களை எந்த அளவு மகிழ்ச்சியில் ஆழ்த்தின தெரியுமா அப்பா! அன்று அவை வரி வடிவில் எம்மை ஆற்றுப்படுத்தின. இன்று
– இவ்விடியலில் குரலாய் வந்து மகிழ்வூட்டி… மறைந்து…
அழவைத்து… ஏனப்பா? சேய்மையில்
உள்ளீரா? அண்மையில் உள்ளீரா? உள்ளே இருக்கின்றீரா?
வெளியில் உலவுகின்றீரா? எந்நிலையில் உள்ளீர் என்று
உணர முடியாமல் மூச்சு முட்டுகிறதே ஏன் அப்பா? சுட்டெழுத்துகள்
மூன்று; உகரச்சுட்டு தமிழகத்தில் பழக்கத்தில் இல்லாது போனது.
இலக்கியத்தில் அங்கும் இங்கும் காணக்கிடைக்கிறது. அதுபோல் இயங்குகின்றீரா அப்பா?
இந்த இனிக்குட்டியையும்
முகிலப்பனையும் ஆற்றுப்படுத்தி வளர்த்திட நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளை அசைபோட
அசைபோட இன்பத்தின் எல்லைக்கே சென்று விடுகிறோம்.
நான் ஏழாம் வகுப்பு படித்துக்
கொண்டிருக்கின்றேன். மேலபுலத்தில் தாங்கள் தலைமை ஆசிரியர்.
அப்பா என்ற தலைப்பில் இலக்கிய மன்றக் கூட்டம் சிறப்புரை நீதான் என்று
கூறுகின்றீர். அதுவரை பேச்சுப் போட்டிகள் அனைத்திற்கும் நீங்கள்தான்
எழுதித் தருவீர்கள்! மனப்பாடம் செய்து ஏற்ற இறக்கத்தோடு பேசுவதோடு
என்கடன் முடிந்தது. அதுபோலவே இதற்கும் எழுதித் தரக் கேட்கிறேன்.
நீங்கள் மறுக்கிறீர்கள். நீயே அணியப்படுத்திக்
கொள் நீயாகத்தான் பேச வேண்டும் என்று தவிக்க விட்டு விட்டுச் சென்று விட்டீர்.
வேண்டுமென்றால் உன் தமிழாசிரியரைக் கேள் என்றும் ஆற்றுப் படுத்தினீர்.
தமிழையா புலவர் எ.வேலாயுதம் அவர்களை அணுகிக் கேட்கிறேன்.
பல வேளைகளுக்கிடையில் அவரால் எழுதிதர இயலவில்லை. தொடர்ந்து அவர் பின்னேயே சென்று கொண்டிருந்த சூழலில் ஆசிரியர் ஓய்வறையில் ஏதோ
வேலை செய்து கொண்டே, “எழுதிக் கொள்; ‘ஈன்று
புறந் தருதல் எந்தலைக் கடனே! சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே”
என்றார். வேறுபணி குறுக்கிட்டது. அவர் சென்று விட்டார். வீட்டிற்கு வந்தேன். தங்களிடம் கேட்டேன். மறுநாள் பிற்பகல் இலக்கிய மன்றக்
கூட்டம். இதுவரை அணியமாகவில்லை. நீங்களோ
திரும்பவும் நீயாகவே அணியமாக வேண்டும் என்று கட்டளை இடுகின்றீர். காலை பள்ளிக்குச் செல்ல மிதிவண்டி ஏறும் போது ‘என்ன அணியமாயிற்றா?’
என்றீர். ‘இல்லையப்பா, இந்த
இரண்டு வரியோடு நிற்கின்றேன்’ என்றேன். மிதிவண்டியிலிருந்தவாறே ஒரு வரலாற்றைச் சொல்கின்றீர். ம.கோ.இராவை தந்தை இறந்த பின்னும்
தாய் வளர்த்ததும் உலகறியச் செய்ததும் சொல்லி ‘அப்பா என்பது உறவு
மட்டுமன்று; அது ஒரு தன்மை; அந்தத் தன்மையில்
இயங்கும் எவரும் தந்தை ஆகலாம்; ம.கோ.இரா. வாழ்வில் தாயே தந்தையானார்’ என்று பேசு என்றீர். நான் அந்தக் கூட்டத்தில் ஈன்று புறந்தருதல்
எந்தலைக் கடனே என்று தொடங்கி நீங்கள் சொன்ன ம.கோ.இரா. வாழ்வை விளக்கி, ‘அன்னையிடம்
அன்பை வாங்கலாம்; தந்தையிடம் அறிவை வாங்கலாம்; இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்; பேரை வாங்கினால்
ஊரை வாங்கலாம்.’ என்று நிறைவு செய்தேன். மாணவர்களும் ஆசிரியர்களும் பாராட்டினர். மகிழ்ந்து நீங்கள்
தாயானீர்கள். அதன் பிறகு எந்தக் கூட்டத்திற்கும் நானே உரை அணியப்படுத்தத்
தெரிந்து கொண்டேன். இப்போதெல்லாம் அதுகூட அன்று; உங்களைப் போலவே பழங்கதை பேசத் தொடங்கிவிட்டேன். அதற்கு
என்ன அணியமாவது?
பொது மேடைகளில் கூட்டம்
தொடங்குவதற்கு முன்பாக பாவேந்தர் பாடல்களையும் பாவலரேறு பாடல்களையும் நானும் இனியனும்
பாடுவோம்.
பாடல்களைத் தெரிவு செய்து கொடுத்து அவற்றை எப்படிப் பாட வேண்டும் என்று
சொல்லிக் கொடுத்து மேடையேற்றுவீர். அப்படி சொல்லிக் கொடுக்கும்
போது அம்மா ‘உங்க அப்பாவுக்கு ஒரே இசைதான் தெரியும். அவர் பாடுகிற மாதிரியே உங்களையும் ஒரே இசையில்தான் பாட வைக்கிறார்’
என்று கிண்டல் செய்வார்கள். இனியனுக்கு மிருதங்கமும்
எனக்கு ஆர்மோனியமும் கற்றுத் தர வேண்டும் என்று விரும்பினீர். ஆனால் அதற்கான வாய்ப்பு கைகூடவே இல்லை. எத்தனை இரவுகளில்
நம் வெற்றியூரில் மண்ணெய் விளக்கு, நிலவொளி ஆகியவற்றுக்கிடையில்
அன்னக்கூடையை மிருதங்கமாக இனியன் அடிக்க பாவலரேறு பாடல்களை நீங்கள் பாடிக் களிப்பேற்றுவீர்கள்.
‘தமிழீழத்தின் குரல்’ வானொலி ஒலிபரப்பு வந்தபின்தானே
நம் வீட்டிற்கு வானொலிப் பெட்டி வந்தது. அதுவரை உங்கள் கச்சேரிதானே!
வானொலிப் பெட்டி என்றதும்
இன்னொரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகின்றது. அப்போது நாம்
சயனபுரத்தில் குடியிருக்கிறோம். நீங்கள் கீழாந்துறையில் பணிசெய்து
வருகின்றீர்கள். நான் முதல் வகுப்பு நெமலி பள்ளியில் படித்துக்கொண்டிருக்கின்றேன்.
சயனபுரத்திலிருந்து என்னை மிதிவண்டியில் அழைத்து வந்து நெமலியில் விட்டு
விட்டு நீங்கள் உங்கள் பள்ளிக்குச் செல்வீர்கள். மாலை நெமலி ஆற்றங்கரையில்
இருக்கும் தி.மு.க. கிளைச் செயலாளர் வெங்கடேசன் அவர்களின் மிதிவண்டி கடையில் இருப்பேன்.
வந்து அழைத்து வருவீர்கள். ஒரு நாள் பள்ளி நேரத்திலேயே
பரபரப்போடு வந்தீர்கள். ஒரு பையில் சின்னதாக ஒரு வானொலிப்பெட்டி.
வீட்டிற்கு வந்தோம். அந்த வானொலிப் பெட்டியை அம்மாவிடம்
கொடுத்துவிட்டு சென்னைக்குச் சென்றுவிட்டீர் பெரியாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள.
பெரியார் மறைவுற்ற செய்தி அறிந்ததும் பள்ளிக்கு விடுப்பு அறிவித்து விட்டு
இந்தியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு விட்டு இரவலாக எங்கோ வானொலியை வாங்கிக்
கொண்டு (இறுதி ஊர்வல நிகழ்வை நேரடி ஒலிபரப்பாகியது வானொலி) வந்து கொடுத்து விட்டு சென்னை சென்றீர் என்பதைப்
பின்னர் அறிந்தேன். பெரியாருக்கு அரசு மரியாதை வழங்க சட்டத்தில்
இடம் இல்லை என்று அரசு அலுவலர்கள் கூறியபோது ‘காந்தியாருக்கு
அரசு மரியாதை வழங்க இடம் இருந்ததா? அப்போது வழங்கினார்கள் இல்லையா!
அதுபோல பெரியாருக்கு வழங்குங்கள். அவர் இந்தியத்
தந்தை என்றால் இவர் தமிழர் தந்தை’ என்றாராம் கலைஞர். கலைஞரின் அந்த உணர்வு அவர் செயல்படுத்துவதற்கு முன்பே உங்களை ஊக்கி உம் அதிகார
எல்லைக்குள் செயல்படுத்தியதை பல முறை எண்ணி எண்ணி வியந்திருக்கின்றேன். சென்னை சென்று திரும்பும் போது விடுதலை நாளிதழும் ‘கடவுளை
மற; மனிதனை நினை’ என்ற சொற்பொறிப்புடன்
கூடிய பெரியார் மார்பு வில்லையை எனக்கும் இனிக்குட்டிக்கும் வாங்கி வந்தீர்கள்.
நாங்கள் அதை பெருமிதத்தோடு எத்தனைக் கூட்டங்களில் அணிந்து கொண்டு நடமாடியிருக்கின்றோம்.
நம் அதிகார எல்லைக்குள்
நம் இனத்திற்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்திட வேண்டும் என்ற தங்களின்
ஆவல்தானே பாவலரேறு ஐயா அவர்களை, அருளியாரை, முகுந்தன் என்ற உமாமகேசுவரனை எல்லாம் ஆசிரியர் மையக் கூட்டங்களுக்கு அழைத்து
வந்து உரையாற்ற வைத்தது. அதிலும் ஈழப்போரின் தொடக்கக் காலத்திலேயே
நம் பங்களிப்பு என்பது சிறப்பாக இருந்தது என்பதை எண்ண எண்ண இனிக்கிறது. நெமலி ஒன்றியம் முழுவதும் ஆசிரியர்களிடம் பணம் திரட்டி அதைத் தமிழீழ மக்கள்
விடுதலைக் கழகத் தலைவர் உமாமகேசுவரனிடம் கையளித்த நிகழ்ச்சி இன்னும் மறக்கமுடியா நிகழ்ச்சியாகும்.
அப்பா! இது வெறொரு மனநிலையில் இருந்து எழுவதாகும். கன்று விடச்
சென்றிருந்தேன். தொடர்ச்சி அறுபட்டு விட்டது. கன்று – பொன்னி ஈன்ற கன்று; உங்கள்
பெயர்தான் அப்பா அதற்கு. உங்களை தமிழிசைக்கு அருகிலேயே நிலைப்படுத்தி
விட்டு வந்த இரவு பிறந்தது. ‘சேங்கன்று போட்டால் காளைக்காக வளர்த்துக்கொள்’
என்றீர்களே, ‘சேங்கன்றும் கிடேரியுமாக மாற்றி மாற்றித்தான்
போடுகின்றனர். இப்போது சேங்கன்று முறைதான் என்றும் நான் கூறினேனே’
அப்படியே பிறந்த கன்று. பொன்னி ஈன்ற கன்று.
பொன்னி உங்கள் புனைப்பெயர்தானே! நீங்களும் உங்கள்
அருமை நண்பர் புஞ்சை செல்வராசன் மாமாவும் ஆசிரியப் பள்ளியில் படித்த காலத்தில் தமிழ்ச்செல்வம்
என்ற (தமிழ்மணி செல்வராசன்?) நாடகத்தை நடத்தினீர்களே
அந்நாடகம் பொன்னி பெயரில் அல்லவா எழுதப்பட்டது?
அழகம்மை கன்று ஈனும்
நிலையில் இருந்த ஒரு நாள் நான் கல்லணையில் குளித்துக் கொண்டிருந்தேன். அப்போது அடுத்து பிறக்கும் கன்றுக்கு அன்னை காவிரியின் பெயரைச் சூட்ட வேண்டும்
என்று முடிவு செய்தேன். கன்று ஈன்றது. பொன்னிறத்தில்
மினுமினு என்று இருந்த அதைப் பார்த்ததும் அம்மா, பொன்னி என்று
பெயரிட்டார்கள். பொன்னி என்பதும் காவிரியின் பெயர்தானே என்று
நான் மகிழ்ந்தேன். அந்தப் பொன்னி நீங்கள்தான் என்பதை பின்னொருநாள்
தங்கள் ‘பாட்டுப் பூக்களைப்’ புரட்டிக்
கொண்டிருந்த போது அம்மா சொன்னார்கள்.
பொன்னி என்றதும் மின்னி
நினைவுக்கு வருகின்றாள். மின்னியோடு, மே முதல் நாள் பிறந்த உழைப்பு எண்ணத்தில் இனிக்கிறாள். வெற்றியூரின் உறவுச் சுற்றம் அல்லவா அவர்கள். மான் விழியோடு
மான்குட்டிப் போலவே மின்னி சுழன்று சுழன்று விளையாடியது இன்னும் எம் மனக்கண்ணில் நிழலாடுகிறது.
நேற்று தொடங்கிய மடல்
இன்றும்
(30.09.2015) தொடர்கின்றது. பல்வேறு இடையீடுகளுக்கிடையில்
தொடர இயலவில்லை. அப்பா இப்போது 4.25 மணி.
3.53இற்கு விழிப்பு வந்தது. எவ்வளவு நேரங்கழித்துத்
தூங்கினாலும் நான்கு மணிக்கு விழிப்பு வந்து விடுகிறது. வேலை
இருந்தால் வேலை செய்கிறோம். இல்லையெனில் ஏதாவது எண்ணிக் கொண்டு
படுக்கையில் கிடக்கின்றோம். சோர்வு அதிகமாக இருந்தால் மீண்டும்
உறங்கி விடுகிறோம். ஆனால் நான்கு மணிக்கு எழுந்து விடுகிற பழக்கம்
மட்டும் மாறவில்லை. எம்மை எழுப்பி விடுகிற ஆற்றல் எது?
அது நீர்தானே! வெற்றியூரில் (அப்போதுதான் அதைத் தொடங்கினீர்) நெமலியில் இருந்தபோதோ,
குப்பத்திலோ, வேட்டாங்குளத்திலோ நீங்கள் எழுப்பி
விடுவதில்லை. ஆனால் நீங்கள் எழுந்து கழனிக்குச் சென்று விடுவீர்கள்.
குப்பத்தில் இருந்த போது குளிக்க ராசு இரெட்டியார் கிணற்றுக்குச் செல்வீர்கள். அப்போது உடன் நானும் வருவேன்.
ஆக விடியலில் எழும் பயிற்சியை எம் இளமைக் காலத்திலேயே கொடுத்தவர் நீர்தான்.
உங்களுக்கு இந்தப் பயிற்சியை அளித்தவர் உம் அத்தான், எங்கள் தாத்மா (தாத்தா + மாமா
= அத்தைக் கணவர் மாமாதானே? தாத்தாவானது எங்ஙனம்?
அவருக்கு நீங்கள் மூத்த மகனாகச் சென்றதாலா? அல்லது
எம் அன்னை அவரை அப்பா என்றழைத்ததாலா?) அ.ப.கி.தானே! அவரை தாத்மா என்று அழைத்துக் கிண்டல் செய்யத் தொடங்கியது கூட வெற்றியூரில்தான்.
ஒன்பதாம் மகவாகப் பிறந்து
ஆறு வயது வரை அன்னையிடம் பால் குடித்துத் தொல்லை செய்த உம்மை உம் அக்கை காமாட்சி அவர்களிடம்
கொண்டு விட்டு விட்டதாகச் சொல்வீர். ஆசிரியரான அத்தான்
அ.ப.கிருட்டினசாமி உமக்குக் கல்வித் தந்தையானது
அப்போதுதான். அவர் பணியாற்றும் ஊர்களிலில் எல்லாம் குடியேறி மாணவர்களை
பண்படுத்துவார். அதைத்தானே நீங்களும் காலம் முழுவதும் கடைப்பிடித்தீர்கள்.
குறிப்பாக ஆட்டுப்பாக்கத்தில் விடியலில் எழுந்து கழனிவெளிக்குச் சென்று
குளித்து விட்டு ஊர் முழுவதும் ஊர்வலமாக வரும்போது மாணவர்கள் அனைவரும் தத்தம் வீடுகளில்
படித்துக் கொண்டிருப்பர். அவர்களைக் கண்காணித்தவாறே நீங்கள் வீட்டிற்கு
வந்து எட்டு மணிக்குள் உணவுண்டு பள்ளிக்குச் சென்று விடுவீர். சிறப்பு வகுப்பு தொடங்கும். கல்வியில் பின்தங்கியிருந்த
ஆட்டுப்பாக்கம் பின்னாளில் பெயர் பெற்று விளங்கக் காரணம் தாங்கள்தானே? வெம்பாக்கம் ஒன்றியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த உங்களுக்கு நெமலி ஒன்றியத்திற்கு
விருப்ப மாறுதல் கொடுத்தவர் தாத்மாதானே. உங்கள் அழகிய கையெழுத்து
– வேகமாக எழுதும் போதே அழகாக இருக்கும் – புத்தகங்களில்
பெயர் எழுதும் போதோ அச்செழுத்தாய் வடிவெடுக்கும் – அதற்கும் மூல
ஊற்று அ.ப.கி.தானே!
அவர் எம் புத்தகங்களுக்கு பெயர் எழுதித் தரும்போது நாங்கள் வியப்போடு
பார்த்துக் கொண்டிருப்போம்.
அவர் வெள்ளைத்தாள்களை
வாங்கி வந்து தைத்து கருப்பு சிவப்பு மையில் பெயர் எழுதி திராவிடர் கழகக் கொடியை பெருக்கற்
குறி போல் இரட்டையாக வரைந்து பின்னர் நாட்குறிப்பும், வீட்டுக் கணக்கும் எழுதுவார் என்று கூறியிருக்கின்றீர்கள். பெற்றோரிடம் இருந்த போது இராசமாணிக்கமாக இருந்த உம்மை அப்பெயர் தங்களுக்குப்
பிடிக்கவில்லை என்ற போது தமிழ்மணியாக மாற்றியவர் தாத்மாதானே. ஏழு அகவையில் ‘எனக்கு இந்தப் பெயர் பிடிக்கவில்லை
(வடமொழி எழுத்து வருவதால்) வேறு பெயர் வேண்டும்’
என்று நீங்கள் கேட்டதாகவும் மறுநாள் காலையில் நீங்கள் குளிக்கச் செல்லும்
போது ‘திராவிட மணி வேண்டுமா தமிழ்மணியா’ என்று தாத்மா கேட்டதாகவும், நீங்கள் தமிழ்மணியைத் தேர்ந்தெடுத்துக்
கொண்டதாகவும் சொல்லியிருக்கின்றீர். திராவிடம் வேண்டாம் தமிழ்தான்
வேண்டும் என்பது உம் பிறப்பின் நோக்கமாக இருப்பினும் அதை நோக்கி ஆற்றுப்படுத்தியது
அ.ப.கி.யின் திராவிட
இயக்க ஈடுபாடுதான் என்பதை எண்ணி வியக்கின்றேன். பெரியார் மீதும்,
அண்ணா மீதும், கலைஞர் மீதும், ம.கோ.இரா. மீதும் நீங்கள் கொண்ட பற்றை நான் அறிந்தே இருக்கின்றேன். திருவூர் ஆசிரியப் பள்ளி மாணவராக இருந்த போதே விருகம்பாக்கம் தி.மு.க மாநாட்டிற்கு நீங்களும் புஞ்சை செல்வராசன் மாமாவும்
சென்று வந்ததைச் சொல்லி இருக்கின்றீர். ஆசிரியப் பயிற்சிக் காலத்தில்
இறைவணக்கப் பாடல் சுழற்சி முறையில் மாணவர்கள் பாடி வந்த நிலையில் உமது முறை வந்தபோது
இறைவணக்கப் பாடலாக ‘நீராரும் கடலுடுத்த’ எனத்தொடங்கும் மனோன்மணியம் சுந்தரனாரின் பாடலைப் பாடி, தமிழ்த்தாயே எம் இறை என மாணவர்க்கு உணர்த்தியதாகவும் சொல்லியிருக்கின்றீர்.
அந்தப் பாடல் பின்னாளில் கலைஞர் ஆட்சிக்கு வந்தபின்னரே தமிழகத்தின் தமிழ்த்தாய்
வாழ்த்துப் பாடல் ஆனது. அப்படிக் கடவுள் நம்பிக்கை அற்றவராகத்
தாங்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியதற்கும் அ.ப.கி.யே அடியெடுத்துக் கொடுத்தார் என்று கொள்ளலாம்தானே!
கடவுள் நம்பிக்கையற்ற
நீங்கள் ஆசிரியப்பணியேற்ற தொடக்கக் காலத்திலேயே மாங்கால் பள்ளியில் அம்மாணவர்களிடத்தில்
‘பாழ்’ என்ற தலைப்பில் பேசியதாக உங்கள் பழைய மாணவர்
ஒருவர் சொன்னார். நீங்கள் அவரின் தொடக்கக் கல்வியில் உணர்த்திய
‘பாழ்’ அவரின் பணி ஓய்வுக்குப் பின் வேதாத்ரி அவர்களிடம்
நிறைவுற்றதாகச் சொன்னார். அப்படி குருட்டுப் பாடமாக பகுத்தறிவைப்
பேசாது தொடர்ந்த ஆய்வில் இருந்து கொண்டே இருந்தீர் என்பதையும் அறிவேன். தாங்கள் கொடுத்த பகுத்தறிவு வெளிச்சத்தில் நின்று நான் கடவுள் மறுப்பைக் கூறிய
ஒரு நேரத்தில் வினா விடை வகையில் உங்கள் தேடலை – உயிர்,
ஊழ்கம் பற்றிய உம் கருத்துகளை – விளக்கிய சூழல்
இன்றும் நினைவில் அசைவாடுகிறது. வெற்றியூரிலிருந்து நெமலிக்கு
நடந்து சென்று கொண்டிருக்கிறோம். சற்குணம் அண்ணன் கழனி வரப்பில்
செல்லும் போது அந்த உரை நிகழ்ந்தது.
அப்போதெல்லாம் பேராசிரியர்
செகநாதன் அவர்களோடு பல மணிநேரங்கள் வேட்டாங்குளம் ஆற்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பீர்கள். நாங்கள் உங்கள் அருகில் அமர்ந்து புரிந்தும் புரியாமலும் கேட்டுக் கொண்டிருப்போம்.
பேராசிரியர் தங்கை சரசுவதி அவர்கள் தங்களை இறுதியாக வந்து பார்த்தபோது
(நீங்கள் பேசாது படுத்துக் கொண்டிருந்த அந்த கொடிய நாளில்) அதைச் சொல்லி எங்கள் நினைவுகளைக் கிளறிவிட்டுச் சென்றார். வள்ளலாரைப் பற்றி, சித்தர்களைப் பற்றி உரையாடி விளக்கம்
பெற நல்ல துணையாக உங்களுக்கு வாய்த்தவர் பேராசிரியர் செகநாதன் அவர்கள். அந்த தேடல் உமது தொடக்கக் காலத்திலேயே இருந்தது என்பதும் அதற்கு அப்போது தீனி
போட்டவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க.
என்பதும் உம்வழியாகவே அறிந்து வைத்திருக்கின்றோம். அதனால்தான் நீங்கள் பாவலரேறு பாசறையின் படைத்தலைவரானீர்.
ஆம் அப்பா, ஆசிரியப் பணியில் மாங்காலில் தொடங்கிய இடையூறு தொடர்ந்து கொண்டே வந்தது.
தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்ட பறையர் மாணவர்களையும், சக்கிலியர் மாணவர்களையும் மற்ற சாதி மாணவர்களுக்கு இணையாக நடத்த நீங்கள் மேற்கொண்ட
முயற்சி, ஆசிரியர்களை ‘அண்ணா’ என்று அழைக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லித் தந்தது எல்லாம் உங்களை தி.மு.க. உறுப்பினராக அடையாளம் காட்டியது.
ஒன்றியக் கூட்டத்தில் தீர்மானம் போட்டு ஒன்றிய எல்லைப்புற ஊர்களுக்கு
அலைகழிக்கப்பட்டீர்கள். அந்தச் சூழலில் புலவர் க. கோவிந்தன் அவர்களின் தொடர்பு ஏற்பட்டு அவரால் அந்த கட்சிக்கு அழைக்கப்பட்டீர்கள்.
ஆனால் அந்த வாய்ப்புகளை மறுத்து விட்டீர்கள். ஏனென்றால்
பெரியார், வள்ளலார், திரு.வி.க ஆகிய மூவரையும் ஒரே உருவத்தில் காணும் அந்த வாய்ப்புக்காக
உம் உயிர் காத்துக் கொண்டிருந்தது. பாவலரேறு என்ற அந்தப் பெருந்தகையைக்
கண்டவுடன் அவர் வழி இயங்கத் தொடங்கியது. தி.மு.க.வில் இணைந்திருந்தால் ச.ம.உ., அமைச்சர் என்று இழிந்து போயிருக்கலாம்.
பாவலரேறு கொள்கை மறவர் என்றதால் புடம் போடப்பட்டு புடம் போடப்பட்டு ஒளிர்ந்து
கொண்டிருக்கின்றீர் அப்பா.
திருக்குறள் மெய்ப்பொருளுரையில்
இறைமை,
கடவுள், தெய்வம் ஆகியவற்றிற்கான விளக்கங்களை ஐயா
அவர்கள் விளக்கும் போது உங்கள் தேடல் ஏன் ஐயாவிடம் சேர்த்தது என்பதை விளங்க வைத்தது.
தமிழ் நெறியில் கடவுள் கோட்பாடு அறவே இல்லை என்பதை விளக்கி ஆற்றுப் படுத்தியிருப்பார்
ஐயா.
பாவலரேறு ஐயா மொழி, இனம், நாடு என்ற முக்கொள்கைகளையும் கைக்கொண்டு தென்மொழி
என்ற படைக்கருவியோடு தனித்து போர் செய்து வந்த நாள்களில் உலகத் தமிழின முன்னேற்றக்
கழகம் உருக்கொள்ளாத போதே ‘தென்மொழி பயிலுநர் அவை’யை 1979இல் தொடங்கினீர். (சூரை
முனிசாமி மாமாதான் உங்களுக்குத் தென்மொழியை முதன்முதலில் வாங்கித்தந்து அறிமுகம் செய்தார்
என்று அவர் சொல்லக் கேட்டேன்) பின்னர் உலகத் தமிழின முன்னேற்றக்
கழகம் தொடங்கப்பட்ட பின்னர் ஐயா அவர்களால் வடவார்க்காடு மாவட்ட அமைப்பாளராகத் தேர்வு
செய்யப்பட்டீர். வெள்ளுடை வேந்தராய் வலம் வந்த உமக்கு செந்துண்டு
என்ற அணியும் சேர்ந்து அழகூட்டியது அப்போதுதான். ‘உலகத் தமிழின
முன்னேற்றக் கழகத்தினர் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது செஞ்சட்டையோ, செந்துண்டோ அணிந்து வர வேண்டும்’ என்ற ஐயாவின் கட்டளையே
தங்களுக்கு செந்துண்டைத் தந்தது. அப்போது எனக்கு செஞ்சட்டை ஒன்றைத்
தைத்து தந்ததும் மறக்கவொண்ணா நிகழ்வு.
ஐயாவைப் போல தாடி வைத்திருக்கின்றீர்
என்று கூட பலரும் கூறுவர். தாடி ஐயாவைப் பார்த்து வந்ததல்ல
என்பதை நாங்கள்தான் அறிவோம். வெற்றியூரில் நாம் குடியிருந்த போது
ஒருமுறை தங்களுக்கு நச்சுக் காய்ச்சல் வந்தது. (வாதக் காய்ச்சல்
அன்று). அந்த காய்ச்சலின் போது உம்மைப் பழைய நிலைக்கு மீட்டு
வந்தவர் துரை அண்ணன் அவர்கள்தாம். ஒரு தாயாய், நல்ல சேயாய், துணையாய் உமக்கு வாய்த்தவர் அவர்.
அப்போதெல்லாம் அவரின் விடியல் உம் முகத்தில்தான் விடியும். நெமலியில் எழுந்து பல்குச்சியை வாயில் வைத்தபடி அவர் கிளம்பினால் வாய் கொப்பளிக்க
வெற்றியூர் தண்ணீர்தான். கையில் பிடித்துக் கொண்டு வரும் சேட்டு
அண்ணன் கடை ஆட்டுக்கால் உமக்குத் தெம்பூட்டும். வறிய நிலையில்
இருந்த நமக்கு ஆட்டுக்கால் எல்லாம் தொடர்ந்து பயன்படுத்த முடியாதுதான். நம்மை விட வறிய நிலையில் இருந்தவர்தான் துரை அண்ணன். ஆனால் செய்ய வேண்டியதை செய்தே ஆக வேண்டும் என்ற துடிப்பு உங்களை அன்று காப்பாற்றியது.
நாங்கள் செய்யத் தவறியதால் இன்று கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றோம்.
அப்படி அவரால் நலமடைந்த நீங்கள் மெலிந்த உருவில் தோற்றப் பொலிவில்லாமல்
இருந்த சூழலில் ஒருநாள் துரை அண்ணன் ‘ஐயா, தாடி வளர்த்துக் கொண்டால் கொஞ்சம் முகம் பார்ப்பதற்கு அழகாகத் தோன்றும்’
என்றார். அன்று தாடி வளர்க்கத் தொடங்கிய தாங்கள்
பின்னாளில் அதுவே அழகாக இருப்பதால் அப்படியே விட்டு விட்டீர். நீங்கள் உங்கள் தந்தை முகம் மழிப்பதையே விரும்பாதவர். அரும்பு மீசையோடு, முறுக்கு மீசையோடு, தாடியோடு, வெள்ளுடையோடு, நீலவுடையோடு,
வெற்றுக் கோவணத்தோடு எப்படிப் பார்த்தாலும் நீங்கள் அழகுதானே அப்பா!
உலகத் தமிழின முன்னேற்றக்
கழகம் தொடங்கப்பட்ட போது அதற்கான அறிவிப்புகள் தென்மொழியில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைகளை நாடாப்பதிவானில் தங்கள் குரலில் பேசிப் பதிந்து அவற்றை ஊர்
ஊராகச் சென்று மக்களிடம் ஒலிபரப்பி, தொடக்க விழா மாநாட்டிற்கு
மக்களைத் திரட்டினோம். வேட்டாங்குளம், நெமலி,
தென்னல் திருமாற்பேறு, கண்டிகை போன்ற ஊர்களிலிருந்து
பொது மக்களை அழைத்தோம். சரக்குந்து ஒன்றை அணியப்படுத்திக் கொண்டு
அவர்களையெல்லாம் அழைத்துச் சென்றீர்கள். செஞ்சட்டையோடு நானும்
வந்தேன். மாநாட்டில் காலை அரங்கம் மாணவர் இளைஞர் அரங்கம்.
நமது சரக்குந்து எல்லா ஊர்களிலும் ஆட்களைத் திரட்டிக் கொண்டு மாநாட்டுத்
திடலை அடைந்த போது மாணவர் இளைஞர் அரங்கம் முற்றுப்பெற்று விட்டது. நான் அப்போது தங்களிடம் சண்டை போட்டது நன்றாக நினைவிற்கு வருகிறது.
அந்த மாநாட்டில் பெருமளவு மக்களைத் திரட்டிச் சென்றது தாங்கள்தான் என்பது
வரலாறு. நிகழ்ச்சியின் முடிவில் பெரியார் திடலிருந்து வீட்டிற்குச்
செல்ல வண்டியில்லாத மாநாட்டுப் பொறுப்பினை ஏற்று நடத்திய மறை. நித்தலின்பன் ஐயா அவர்களின் குழுவினரை அண்ணாசாலை வழியாக அழைத்து வந்து இறக்கி
விட்டு பின் ஊர் திரும்பியது பசுமையான நினைவாகவே உள்ளது.
உலகத் தமிழின முன்னேற்றக்
கழகம் தொடங்கப்பட்ட பின்னர் தாங்கள் மாவட்ட அமைப்பாளராகவும், ஐயா தன்னொளியனார் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பமர்த்தம் செய்யப்பட்டீர்.
வட்டப் பொறுப்புகளில் அறக்கோணம் வட்டச் செயலாளராக பெரியப்பா மு.
கதிரவனாரும், செய்யாறு வட்டச் செயலாளராக ஆசிரியர்
மா. சீராளன் அவர்களும் பொறுப்பு வழங்கப்பட்டனர். கிளையமைப்பு முயற்சிகளில் நீங்கள் முனைந்து நின்றீர்கள். பனப்பாக்கத்தில் கிளைத் தொடக்க விழாவும் கொடியேற்றமும் நடைபெற்றது.
ஐயா ஏற்றி வைத்த உ.த.மு.க. கொடி பட்டொளி வீசிப் பறந்தது. சானகியண்ணன், கதிரவனாக மாறிய பாசுகரன், புதூர் வெங்கடேசன் அண்ணன் போன்றோர் பனப்பாக்கம் கிளையில் உறுப்பினராகினர்.
ஆனால் ஏனோ தெரியவில்லை. பாவலரேறு கிளைகளைக் கட்டுவதைக்
கொஞ்சம் தள்ளிப் போடுங்கள் என்று கூறியதாகச் சொன்னீர்கள். ஐயா
அவர்களின் திட்டம் என்னவென்று இன்றுவரை நமக்குத் தெரியவில்லை. எனினும் தங்களின் மாணவர்கள் – உ.த.மு.க.வினர்
இன்றும் பனப்பாக்கம், நெமலியில் நிறைந்து உங்களை நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அமைப்பு வழியில் அவர்கள் வெவ்வேறு அமைப்பாக இயங்கினாலும் உ.த.மு.கவின் ஏழு கொள்கைகளை தங்கள்
வழியாக ஏற்றுப் பரப்பும் பணியைச் செவ்வனே செய்து வருகின்றனர்.
அந்தப் பாதையில்தான்
எங்களின் தமிழ்நாடு இளைஞர் பேரவையின் பயணம், தமிழர் கழகத்தின்
இயக்கம் இடையூறில்லாமல் தொடர்கிறது. புதிதாக யாரையாவது நாங்கள்
சேர்த்தோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நற்றேவனை
திராவிடர் கழகத்திலிருந்து தமிழ்நாடு இளைஞர் பேரவைக்கு அழைத்து வந்தது நாங்கள்தான்
என்றாலும் அவரையும் அவரோடு திராவிடர் கழகத்திலிருந்து வந்த முருகேசன் போன்றவர்களையும்
வழி நடத்தியவர் தாங்கள்தாமே. நாங்கள் மட்டுமென்ன தங்கள் விரல்
பிடித்தே இன்று வரை தடம் பதிக்கின்றோம்.
புலவரை, தோழர் தமிழரசனை, பொன்பரப்பி இராசேந்திரனை, தோழர் தருமலிங்கத்தை யார் எமக்கு அறிமுகம் செய்தது? நீங்கள்தாமே!
பொன்பரப்பி படுகொலைக்குப் பின்னர் அந்தச் செய்திகளைப் பார்த்து விட்டு
குமரவேல் ஐயா என்னைத் தனியே அழைத்துச் சென்று தோழர் தருமலிங்கத்தின் படத்தைக் காட்டி,
‘அவரா இவர்’ என்று கேட்டார். ஆம் என்றேன். எத்தனை முறை நம்மோடு தோழர் பலரையும் சந்தித்திருப்பார்.
மாத்தூர் மக்களுக்கு அவர் என் மாமா என்றுதானே அறிமுகம்.
கல்லூரி நாள்களில் தென்மொழி
அச்சகத்தில் மாலை நேரங்களைச் செலவிட்ட நான் கோடை விடுமுறைக்குத் திருச்சி செல்கின்றேன்
என்ற போது, வருத்தத்தோடு மறுக்காமல் வண்டியேற்றி அனுப்பிய
அந்தக் காட்சி இன்றும் கண்முன் வந்து கண்ணீரையும் துணைக்கழைக்கிறது. பூம்பொழில் அச்சகத்தில் பணி செய்யப் போகின்றேன் என்று சென்றாலும் நான் எதற்குச்
செல்கின்றேன் என்று நன்றாக உணர்ந்ததால் தமது தடம் பதித்து தம் மகன் நடையிடுகிறான் என்ற
மகிழ்வு இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டிய துன்பங்களை எண்ணி நீங்கள் கலங்கியதை அறிவேன்.
தமிழ்நாடு உழவர் பேரவை
கட்டுவதிலும் தமிழ்நாடு இளைஞர் பேரவை அமைப்பதிலும் தாங்கள் எங்களோடு காட்டிய பேரவா –
பேருழைப்பு – எண்ண எண்ண இன்பம் தருவனவே.
தோழர்கள் மாறன், குணத்தொகையன், பவணந்தி, பொழிலன் ஆகியோர் மாத்தூரில் தங்கியிருந்து மக்களைக்
கண்டு கருத்துப் பரப்பிய போது எங்களைத் தாங்கியது தாங்கள்தாமே!
1988இல் ஆளுநர்
ஆட்சியின் கொடுமைகள் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு
இளைஞர் பேரவை, தமிழ்நாடு உழவர் பேரவை அமைப்புகளை சிதற அடித்த
போதும் உறுதியாக இருந்து புயலுக்குப் பின்னும் இயக்கத்தை உயிர்ப்பித்தது உமது செயல்தானே!
எமக்கு முன்பாகச் சிறைபட்டாலும்
சட்டப்புறமாக ஏறத்தாழ ஒரு மாத காலம் காவல் துறையின் பிடிக்குள் சிக்கித் துன்புறுத்தப்பட்ட
சூழலிலும் என்னையும் இனிக்குட்டியையும் மதுரை சிறை வாவென்று அழைத்தபோது நாங்கள் வெற்றியூரில்
இருந்த அதே மகிழ்வான மனநிலையில் இருக்கச் செய்தது உங்கள் ஆதரவும் அரவணைப்பும்தானே.
ஆசிரியர் அரசு ஊழியர்
போராட்டத்தின் போது முதல் நாள் போராட்டத்தில் அறக்கோணம் வட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களில்
யாருமே தளைப்படத் தயங்கிய போது அந்தத் தயக்கத்தை உடைத்தெறிந்து காவல்துறை வண்டியில்
முதலில் ஏறி வழிகாட்டிய பெருந்தகை நீங்கள் அல்லவா? அதன்
பின்னரே பன்னிருவர் உங்களைத் தொடர்ந்தார்கள் என்பது வரலாறல்லவா? அந்த நெஞ்சத் துணிவுதான் என்னையும் முரட்டுப் பிள்ளையாக்கி வைத்துள்ளது என்பதும்
உண்மைதானே.
சிறை மீண்டு வந்தபின்
தொடர்ந்து தமிழ்நாடு இளைஞர் பேரவை வேலைகளில் ஈடுபட்ட எம்மை இயக்கியது நீங்கள்தாமே! ஆசிரியர் பன்னீர்ச்செல்வம் அவர்களின் மகளும் தமிழிசையின் தோழியுமான கண்ணகியின்
திருமணத்திற்கு பாவலரேறு தலைமை. அன்றே பனப்பாக்கத்தில் பொதுக்கூட்டம்
நடத்த நாங்கள் திட்டமிட்டோம். பாவலரேறு அவர்களின் வருகையை நாம்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தக் கூட்டத்தை அணியப்படுத்தினோம்.
கூட்டத் தலைமை நான். திருமணம் சிறப்புற நடைபெற்றது.
அப்போது எடுக்கப்பட்ட ஒளிப்படத் தோற்றம்தான் பாவலரேறு அவர்களின் இறுதி
ஊர்வலத்தில் மக்கள் உயர்த்திப் பிடித்த படங்களாகவும், இன்று தமிழிசை
கணினிச் செயலகச் சுவரின் ஓவியமாகவும், என் திருமணத்தின் போது
பின்னணியில் வைக்கப்பட்ட படமாக அமைந்ததாகும். அன்று பகல் உணவின்
போது பொதுக்கூட்டத்திற்கு போவது பற்றிக் கேட்ட போது ஐயா, ‘தம்பி!
நான் கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றி எங்கள் மாவட்ட அமைப்பாளரிடம்
சொன்னீர்களா? அவர் இசைவில்லாமல் நான் எப்படி கலந்து கொள்வது?’
என்று கேட்டார். கூட்ட ஏற்பாடு முதற்கொண்டு உங்கள்
துணையோடே செய்து வரும் எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. நீங்கள்
உ.த.மு.க.
என்றும் நான் தமிழ்நாடு இளைஞர் பேரவை என்றும் இயங்கத் தொடங்கிய பின்னர்
நமக்குள் உள்ள கொள்கை உறவு எத்தன்மையது என்று அறிந்து கொள்ளும் நோக்கத்தோடே ஐயா அவ்வாறு
வினவியிருக்கலாம். தோழர் பொழிலன் அவர்களோடு சேர்ந்து நாம் இயங்கி
வருகின்ற சூழலில் அவருக்கும் ஐயாவுக்கும் இடையேயான சிறுசிறு மாறுபாடுகளால் அவ்வினா
வெளிப்பட்டிருக்கலாம். ஆனால் என்றைக்கும் நான் உங்கள் பிள்ளையாகவே
இருந்து வருவதைத் தாங்கள் அறிவீர்கள்.
தங்களோடு பல நிலைகளில்
மாறுபாடு கொண்டு சண்டை போட்டவன்தான் நான். தங்களின் எல்லா
கருத்துகளோடும் உடன்பட்டுவிட முடியாத நிலையில் உள்ளவன்தான் நான். ஆனாலும் அந்தக் கருத்துகள் எவ்வளவு வலிமையாகத் தங்களிடம் சொல்லப்பட்ட போதிலும்
முடிவு செயலுக்கு வருகின்ற போது அது தங்களின் வினைதானே தவிர எம் வினை என்று எதுவும்
இல்லை. எம் கருத்தை ஏற்க வைத்தோம் என்ற சூழல் எப்போதாவது ஏற்படும்
என்றாலும் தாங்கள் ஏற்றுக் கொண்டாலே அது செயலாகும். இல்லையென்றால்
அது முகிலனின் கருத்தாக மட்டுமே இருக்கும் என்பதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள்.
அப்பா, தங்களின் சிறகிலேயே எம்மை இருக்கச் செய்யாதீர்கள்; எம்மைப்
பறக்க விடுங்கள் என்று பலமுறை நான் மன்றாடியிருக்கின்றேன். ஆனாலும்
உங்கள் அன்புச் சிறையில்தான் நாங்கள் அடைபட்டுக் கிடந்தோம். எந்தத்
தந்தைக்கும் கிடைக்காத வாய்ப்பு அதனால்தான் உங்களுக்குக் கிடைத்தது. உங்கள் ஐந்து பிள்ளைகளும் உங்கள் பார்வையிலேயே இருக்கின்ற – வாழ்கின்ற – சூழலை உங்களின் அன்புதான் ஏற்படுத்தியது.
தங்கை தமிழிசை தம் இறுதி மூச்சை உம் நிழலில் அல்லவா நிறுத்திக் கொண்டார்.
அப்பா, கண்ணீருக்கிடையில் இம்மடலை எழுதிக் கொண்டிருந்தாலும் அடிநெஞ்சில் ஒரு நிறைவை
– மகிழ்வைத் தருகின்றது. நம் பாட்டனின்
‘இன்னா தம்ம இவ்வுலகம்; இனிய காண்கிதன் இயல்புணர்ந்
தோரே’ என்ற வரிகளின் உண்மைப் பொருளை இந்த இரண்டு நாள்களில் நான்
முழுமையாக உணர்ந்தேன். ஒற்றை விளியில் உசுப்பி விட்டு இரண்டு
நாள்களும் உம் நினைவிலேயே கரைய வைத்த தந்தையே விடை பெறுகிறேன். தொடர்ந்து துணையிருக்க வேண்டுகின்றேன்.
அன்புடன்
தமிழ். முகிலன்
அன்புடன்
தமிழ். முகிலன்
1 கருத்து:
Aalilla kudhirai endha uoor poicherum. Karppaniye enralum Kadul unaru vendum. Bhavanai adhanaik koodil avanaiyum koodalame enrar Nammazhvar.Valluvandhan namakku ucha needhi manram. Agaramudhalai manam vippom...Aasukavi Aravamudhan. Kallakurichi.9443398040
கருத்துரையிடுக