திங்கள், 5 அக்டோபர், 2015

அன்புள்ள அப்பா, வணக்கம்.
சற்றுமுன் (29.09.2015 விடியல் 4) விழித்த நிலையில் நல்லிசை அமிழ்தின் எதிர்காலம் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் மென்மையான ஆனால் அழுத்தமான குரலில்முகிலப்பாஎன்றீர்கள். நான் அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் விழிப்பிலும் ஒரு மயக்கநிலையில் இருந்ததை உணர்ந்தேன். உங்கள் குரல் அம்மயக்கத்திலிருந்து முழு விழிப்பு நிலைக்குத் தள்ளியது. மீண்டும் ஒருமுறை தாங்கள் அழைக்கமாட்டீர்களா என்று பழையபடி மயக்க நிலைக்கே திரும்ப மனம் விழைந்த போதிலும் செயல் கூடவில்லை.

அப்பா, ஏனப்பா இப்படி எம்மை இருந்தும் இல்லாத இரண்டுங்கெட்டான் நிலைக்குத் தள்ளி விட்டீர்கள். அன்றைக்கு மருத்துவர் விமுனாமூர்த்தி ஐயாபாலசிங்கத்திற்கு நினைவேந்தல் நிகழ்த்தினோம், திருச்சி சவுந்திரராசனுக்கு நடத்தினோம். புலவருக்கு நடத்தினோம். ஆனால் முற்போக்குச் சமூகநீதிப் பேரவையால் ஐயா தமிழ்மணிக்கு நடத்த முடியவில்லை. ஏனெனில் நாங்கள் அவரை இழந்ததாக இன்னும் நினைக்க முடியவில்லைஎன்று சொன்னாரே, அதே மன உணர்வு எம் எல்லோருள்ளும் இருந்து, இருப்பு நிலையை ஏற்றுக் கொள்ளத் தடை செய்கின்றதே, ஏன் அப்பா? சரி, அந்த கனவுநிலையாவது தொடர்ந்து வந்து இன்பம் அளிப்பதாக இருந்திடக் கூடாதா? விட்டு விட்டு கலைந்து நெடுந் துன்பத்தை ஏனப்பா அளிக்கிறது?

முகிலப்பா என்ற அந்த இனிய சொல்லை என்னை அழைக்கின்ற விளியென்றே பல காலமும் நினைத்திருந்தேன். தாத்தா, பாட்டி படத்தை வரைந்து தர செயங்கொண்டத்தில் தாமு ஐயாவைப் பார்க்கின்ற நேரத்தில்தான் என்னில் நீங்கள் உங்கள் தந்தையைக் காண்கின்றீர்கள் என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன். உங்கள் அன்னையை தமிழிசையில் காண்பதை நாங்கள் அனைவரும் சிறுவயது முதல் அறிந்துதான் இருந்தோம் என்றாலும் தந்தையை என்னில் காண்பதை உணர்ந்த நேரம் அதுதான். அதற்கு முன் பல முறை தாங்கள் புரட்டாசி மூன்றாம் காரியன்று பிறந்த தாத்தாவையும் நான் பிறந்த புரட்டாசி மூன்றாம் காரியையும் இணைத்து கூறிய போதெல்லாம் அதை உணர முடியவில்லை. என் பதிமூன்றாம் பிறந்தநாளன்று உலகப் பெரும் விஞ்ஞானிகள் என்ற நூலை அன்பளிப்பாக அளித்தீர்கள். அந்நூலில் முதல் பக்கத்தில்பிறப்பெடுத்தாய்; பரம்பொருள் கூறாய்; பிள்ளையெனும் உறவும் தந்தாய்எனத்தொடங்கும் வெண்பாவால் வாழ்த்தியிருந்தீர்கள். உறவும் என்பதில் உள்ளஉம்மை என்னவென்று அன்று தெரியவில்லை. இன்றுதான் உணர முடிகிறது. அதேபோல் உங்கள் அன்பிற்குரிய செல்லக்குட்டிஇனிக்குட்டிதான் என்பதை அந்த விளியிலேயே பொதிந்து வைத்திருந்தீர்கள். நேரில் நேயத்தோடு அழைப்பதில் மட்டுமல்லாது மிகு தொலைவில் மதுரையில் இருந்த போதும், திருச்சியில் இருந்த போதும், பாளையில் இருந்தபோதும்முகிலப்பாவும், இனிக்குட்டியும்எங்களை எந்த அளவு மகிழ்ச்சியில் ஆழ்த்தின தெரியுமா அப்பா! அன்று அவை வரி வடிவில் எம்மை ஆற்றுப்படுத்தின. இன்றுஇவ்விடியலில் குரலாய் வந்து மகிழ்வூட்டிமறைந்துஅழவைத்துஏனப்பா? சேய்மையில் உள்ளீரா? அண்மையில் உள்ளீரா? உள்ளே இருக்கின்றீரா? வெளியில் உலவுகின்றீரா? எந்நிலையில் உள்ளீர் என்று உணர முடியாமல் மூச்சு முட்டுகிறதே ஏன் அப்பா? சுட்டெழுத்துகள் மூன்று; உகரச்சுட்டு தமிழகத்தில் பழக்கத்தில் இல்லாது போனது. இலக்கியத்தில் அங்கும் இங்கும் காணக்கிடைக்கிறது. அதுபோல் இயங்குகின்றீரா அப்பா?

இந்த இனிக்குட்டியையும் முகிலப்பனையும் ஆற்றுப்படுத்தி வளர்த்திட நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளை அசைபோட அசைபோட இன்பத்தின் எல்லைக்கே சென்று விடுகிறோம்.

நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றேன். மேலபுலத்தில் தாங்கள் தலைமை ஆசிரியர். அப்பா என்ற தலைப்பில் இலக்கிய மன்றக் கூட்டம் சிறப்புரை நீதான் என்று கூறுகின்றீர். அதுவரை பேச்சுப் போட்டிகள் அனைத்திற்கும் நீங்கள்தான் எழுதித் தருவீர்கள்! மனப்பாடம் செய்து ஏற்ற இறக்கத்தோடு பேசுவதோடு என்கடன் முடிந்தது. அதுபோலவே இதற்கும் எழுதித் தரக் கேட்கிறேன். நீங்கள் மறுக்கிறீர்கள். நீயே அணியப்படுத்திக் கொள் நீயாகத்தான் பேச வேண்டும் என்று தவிக்க விட்டு விட்டுச் சென்று விட்டீர். வேண்டுமென்றால் உன் தமிழாசிரியரைக் கேள் என்றும் ஆற்றுப் படுத்தினீர். தமிழையா புலவர் எ.வேலாயுதம் அவர்களை அணுகிக் கேட்கிறேன். பல வேளைகளுக்கிடையில் அவரால் எழுதிதர இயலவில்லை. தொடர்ந்து அவர் பின்னேயே சென்று கொண்டிருந்த சூழலில் ஆசிரியர் ஓய்வறையில் ஏதோ வேலை செய்து கொண்டே, “எழுதிக் கொள்; ‘ஈன்று புறந் தருதல் எந்தலைக் கடனே! சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனேஎன்றார். வேறுபணி குறுக்கிட்டது. அவர் சென்று விட்டார். வீட்டிற்கு வந்தேன். தங்களிடம் கேட்டேன். மறுநாள் பிற்பகல் இலக்கிய மன்றக் கூட்டம். இதுவரை அணியமாகவில்லை. நீங்களோ திரும்பவும் நீயாகவே அணியமாக வேண்டும் என்று கட்டளை இடுகின்றீர். காலை பள்ளிக்குச் செல்ல மிதிவண்டி ஏறும் போதுஎன்ன அணியமாயிற்றா?’ என்றீர். ‘இல்லையப்பா, இந்த இரண்டு வரியோடு நிற்கின்றேன்என்றேன். மிதிவண்டியிலிருந்தவாறே ஒரு வரலாற்றைச் சொல்கின்றீர். .கோ.இராவை தந்தை இறந்த பின்னும் தாய் வளர்த்ததும் உலகறியச் செய்ததும் சொல்லிஅப்பா என்பது உறவு மட்டுமன்று; அது ஒரு தன்மை; அந்தத் தன்மையில் இயங்கும் எவரும் தந்தை ஆகலாம்; .கோ.இரா. வாழ்வில் தாயே தந்தையானார்என்று பேசு என்றீர். நான் அந்தக் கூட்டத்தில் ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே என்று தொடங்கி நீங்கள் சொன்ன ம.கோ.இரா. வாழ்வை விளக்கி, ‘அன்னையிடம் அன்பை வாங்கலாம்; தந்தையிடம் அறிவை வாங்கலாம்; இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்; பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்.’ என்று நிறைவு செய்தேன். மாணவர்களும் ஆசிரியர்களும் பாராட்டினர். மகிழ்ந்து நீங்கள் தாயானீர்கள். அதன் பிறகு எந்தக் கூட்டத்திற்கும் நானே உரை அணியப்படுத்தத் தெரிந்து கொண்டேன். இப்போதெல்லாம் அதுகூட அன்று; உங்களைப் போலவே பழங்கதை பேசத் தொடங்கிவிட்டேன். அதற்கு என்ன அணியமாவது?

பொது மேடைகளில் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பாவேந்தர் பாடல்களையும் பாவலரேறு பாடல்களையும் நானும் இனியனும் பாடுவோம். பாடல்களைத் தெரிவு செய்து கொடுத்து அவற்றை எப்படிப் பாட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து மேடையேற்றுவீர். அப்படி சொல்லிக் கொடுக்கும் போது அம்மாஉங்க அப்பாவுக்கு ஒரே இசைதான் தெரியும். அவர் பாடுகிற மாதிரியே உங்களையும் ஒரே இசையில்தான் பாட வைக்கிறார்என்று கிண்டல் செய்வார்கள். இனியனுக்கு மிருதங்கமும் எனக்கு ஆர்மோனியமும் கற்றுத் தர வேண்டும் என்று விரும்பினீர். ஆனால் அதற்கான வாய்ப்பு கைகூடவே இல்லை. எத்தனை இரவுகளில் நம் வெற்றியூரில் மண்ணெய் விளக்கு, நிலவொளி ஆகியவற்றுக்கிடையில் அன்னக்கூடையை மிருதங்கமாக இனியன் அடிக்க பாவலரேறு  பாடல்களை நீங்கள் பாடிக் களிப்பேற்றுவீர்கள். ‘தமிழீழத்தின் குரல்வானொலி ஒலிபரப்பு வந்தபின்தானே நம் வீட்டிற்கு வானொலிப் பெட்டி வந்தது. அதுவரை உங்கள் கச்சேரிதானே!

வானொலிப் பெட்டி என்றதும் இன்னொரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகின்றது. அப்போது நாம் சயனபுரத்தில் குடியிருக்கிறோம். நீங்கள் கீழாந்துறையில் பணிசெய்து வருகின்றீர்கள். நான் முதல் வகுப்பு நெமலி பள்ளியில் படித்துக்கொண்டிருக்கின்றேன். சயனபுரத்திலிருந்து என்னை மிதிவண்டியில் அழைத்து வந்து நெமலியில் விட்டு விட்டு நீங்கள் உங்கள் பள்ளிக்குச் செல்வீர்கள். மாலை நெமலி ஆற்றங்கரையில் இருக்கும் தி.மு.. கிளைச் செயலாளர் வெங்கடேசன் அவர்களின் மிதிவண்டி கடையில் இருப்பேன். வந்து அழைத்து வருவீர்கள். ஒரு நாள் பள்ளி நேரத்திலேயே பரபரப்போடு வந்தீர்கள். ஒரு பையில் சின்னதாக ஒரு வானொலிப்பெட்டி. வீட்டிற்கு வந்தோம். அந்த வானொலிப் பெட்டியை அம்மாவிடம் கொடுத்துவிட்டு சென்னைக்குச் சென்றுவிட்டீர் பெரியாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள. பெரியார் மறைவுற்ற செய்தி அறிந்ததும் பள்ளிக்கு விடுப்பு அறிவித்து விட்டு இந்தியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு விட்டு இரவலாக எங்கோ வானொலியை வாங்கிக் கொண்டு (இறுதி ஊர்வல நிகழ்வை நேரடி ஒலிபரப்பாகியது வானொலி) வந்து கொடுத்து விட்டு சென்னை சென்றீர் என்பதைப் பின்னர் அறிந்தேன். பெரியாருக்கு அரசு மரியாதை வழங்க சட்டத்தில் இடம் இல்லை என்று அரசு அலுவலர்கள் கூறியபோதுகாந்தியாருக்கு அரசு மரியாதை வழங்க இடம் இருந்ததா? அப்போது வழங்கினார்கள் இல்லையா! அதுபோல பெரியாருக்கு வழங்குங்கள். அவர் இந்தியத் தந்தை என்றால் இவர் தமிழர் தந்தைஎன்றாராம் கலைஞர். கலைஞரின் அந்த உணர்வு அவர் செயல்படுத்துவதற்கு முன்பே உங்களை ஊக்கி உம் அதிகார எல்லைக்குள் செயல்படுத்தியதை பல முறை எண்ணி எண்ணி வியந்திருக்கின்றேன். சென்னை சென்று திரும்பும் போது விடுதலை நாளிதழும்கடவுளை மற; மனிதனை நினைஎன்ற சொற்பொறிப்புடன் கூடிய பெரியார் மார்பு வில்லையை எனக்கும் இனிக்குட்டிக்கும் வாங்கி வந்தீர்கள். நாங்கள் அதை பெருமிதத்தோடு எத்தனைக் கூட்டங்களில் அணிந்து கொண்டு நடமாடியிருக்கின்றோம்.

நம் அதிகார எல்லைக்குள் நம் இனத்திற்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்திட வேண்டும் என்ற தங்களின் ஆவல்தானே பாவலரேறு ஐயா அவர்களை, அருளியாரை, முகுந்தன் என்ற உமாமகேசுவரனை எல்லாம் ஆசிரியர் மையக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து உரையாற்ற வைத்தது. அதிலும் ஈழப்போரின் தொடக்கக் காலத்திலேயே நம் பங்களிப்பு என்பது சிறப்பாக இருந்தது என்பதை எண்ண எண்ண இனிக்கிறது. நெமலி ஒன்றியம் முழுவதும் ஆசிரியர்களிடம் பணம் திரட்டி அதைத் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் உமாமகேசுவரனிடம் கையளித்த நிகழ்ச்சி இன்னும் மறக்கமுடியா நிகழ்ச்சியாகும்.

அப்பா! இது வெறொரு மனநிலையில் இருந்து எழுவதாகும். கன்று விடச் சென்றிருந்தேன். தொடர்ச்சி அறுபட்டு விட்டது. கன்றுபொன்னி ஈன்ற கன்று; உங்கள் பெயர்தான் அப்பா அதற்கு. உங்களை தமிழிசைக்கு அருகிலேயே நிலைப்படுத்தி விட்டு வந்த இரவு பிறந்தது. ‘சேங்கன்று போட்டால் காளைக்காக வளர்த்துக்கொள்என்றீர்களே, ‘சேங்கன்றும் கிடேரியுமாக மாற்றி மாற்றித்தான் போடுகின்றனர். இப்போது சேங்கன்று முறைதான் என்றும் நான் கூறினேனேஅப்படியே பிறந்த கன்று. பொன்னி ஈன்ற கன்று. பொன்னி உங்கள் புனைப்பெயர்தானே! நீங்களும் உங்கள் அருமை நண்பர் புஞ்சை செல்வராசன் மாமாவும் ஆசிரியப் பள்ளியில் படித்த காலத்தில் தமிழ்ச்செல்வம் என்ற (தமிழ்மணி செல்வராசன்?) நாடகத்தை நடத்தினீர்களே அந்நாடகம் பொன்னி பெயரில் அல்லவா எழுதப்பட்டது?

அழகம்மை கன்று ஈனும் நிலையில் இருந்த ஒரு நாள் நான் கல்லணையில் குளித்துக் கொண்டிருந்தேன். அப்போது அடுத்து பிறக்கும் கன்றுக்கு அன்னை காவிரியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். கன்று ஈன்றது. பொன்னிறத்தில் மினுமினு என்று இருந்த அதைப் பார்த்ததும் அம்மா, பொன்னி என்று பெயரிட்டார்கள். பொன்னி என்பதும் காவிரியின் பெயர்தானே என்று நான் மகிழ்ந்தேன். அந்தப் பொன்னி நீங்கள்தான் என்பதை பின்னொருநாள் தங்கள் பாட்டுப் பூக்களைப்புரட்டிக் கொண்டிருந்த போது அம்மா சொன்னார்கள்.

பொன்னி என்றதும் மின்னி நினைவுக்கு வருகின்றாள். மின்னியோடு, மே முதல் நாள் பிறந்த உழைப்பு எண்ணத்தில் இனிக்கிறாள். வெற்றியூரின் உறவுச் சுற்றம் அல்லவா அவர்கள். மான் விழியோடு மான்குட்டிப் போலவே மின்னி சுழன்று சுழன்று விளையாடியது இன்னும் எம் மனக்கண்ணில் நிழலாடுகிறது.

நேற்று தொடங்கிய மடல் இன்றும் (30.09.2015) தொடர்கின்றது. பல்வேறு இடையீடுகளுக்கிடையில் தொடர இயலவில்லை. அப்பா இப்போது 4.25 மணி. 3.53இற்கு விழிப்பு வந்தது. எவ்வளவு நேரங்கழித்துத் தூங்கினாலும் நான்கு மணிக்கு விழிப்பு வந்து விடுகிறது. வேலை இருந்தால் வேலை செய்கிறோம். இல்லையெனில் ஏதாவது எண்ணிக் கொண்டு படுக்கையில் கிடக்கின்றோம். சோர்வு அதிகமாக இருந்தால் மீண்டும் உறங்கி விடுகிறோம். ஆனால் நான்கு மணிக்கு எழுந்து விடுகிற பழக்கம் மட்டும் மாறவில்லை. எம்மை எழுப்பி விடுகிற ஆற்றல் எது? அது நீர்தானே! வெற்றியூரில் (அப்போதுதான் அதைத் தொடங்கினீர்) நெமலியில் இருந்தபோதோ, குப்பத்திலோ, வேட்டாங்குளத்திலோ நீங்கள் எழுப்பி விடுவதில்லை. ஆனால் நீங்கள் எழுந்து கழனிக்குச் சென்று விடுவீர்கள். குப்பத்தில் இருந்த போது குளிக்க ராசு இரெட்டியார் கிணற்றுக்குச் செல்வீர்கள். அப்போது உடன் நானும் வருவேன். ஆக விடியலில் எழும் பயிற்சியை எம் இளமைக் காலத்திலேயே கொடுத்தவர் நீர்தான். உங்களுக்கு இந்தப் பயிற்சியை அளித்தவர் உம் அத்தான், எங்கள் தாத்மா (தாத்தா + மாமா = அத்தைக் கணவர் மாமாதானே? தாத்தாவானது எங்ஙனம்? அவருக்கு நீங்கள் மூத்த மகனாகச் சென்றதாலா? அல்லது எம் அன்னை அவரை அப்பா என்றழைத்ததாலா?) ..கி.தானே! அவரை தாத்மா என்று அழைத்துக் கிண்டல் செய்யத் தொடங்கியது கூட வெற்றியூரில்தான்.

ஒன்பதாம் மகவாகப் பிறந்து ஆறு வயது வரை அன்னையிடம் பால் குடித்துத் தொல்லை செய்த உம்மை உம் அக்கை காமாட்சி அவர்களிடம் கொண்டு விட்டு விட்டதாகச் சொல்வீர். ஆசிரியரான அத்தான் அ..கிருட்டினசாமி உமக்குக் கல்வித் தந்தையானது அப்போதுதான். அவர் பணியாற்றும் ஊர்களிலில் எல்லாம் குடியேறி மாணவர்களை பண்படுத்துவார். அதைத்தானே நீங்களும் காலம் முழுவதும் கடைப்பிடித்தீர்கள். குறிப்பாக ஆட்டுப்பாக்கத்தில் விடியலில் எழுந்து கழனிவெளிக்குச் சென்று குளித்து விட்டு ஊர் முழுவதும் ஊர்வலமாக வரும்போது மாணவர்கள் அனைவரும் தத்தம் வீடுகளில் படித்துக் கொண்டிருப்பர். அவர்களைக் கண்காணித்தவாறே நீங்கள் வீட்டிற்கு வந்து எட்டு மணிக்குள் உணவுண்டு பள்ளிக்குச் சென்று விடுவீர். சிறப்பு வகுப்பு தொடங்கும். கல்வியில் பின்தங்கியிருந்த ஆட்டுப்பாக்கம் பின்னாளில் பெயர் பெற்று விளங்கக் காரணம் தாங்கள்தானே? வெம்பாக்கம் ஒன்றியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த உங்களுக்கு நெமலி ஒன்றியத்திற்கு விருப்ப மாறுதல் கொடுத்தவர் தாத்மாதானே. உங்கள் அழகிய கையெழுத்துவேகமாக எழுதும் போதே அழகாக இருக்கும்புத்தகங்களில் பெயர் எழுதும் போதோ அச்செழுத்தாய் வடிவெடுக்கும்அதற்கும் மூல ஊற்று அ..கி.தானே! அவர் எம் புத்தகங்களுக்கு பெயர் எழுதித் தரும்போது நாங்கள் வியப்போடு பார்த்துக் கொண்டிருப்போம்.
அவர் வெள்ளைத்தாள்களை வாங்கி வந்து தைத்து கருப்பு சிவப்பு மையில் பெயர் எழுதி திராவிடர் கழகக் கொடியை பெருக்கற் குறி போல் இரட்டையாக வரைந்து பின்னர் நாட்குறிப்பும், வீட்டுக் கணக்கும் எழுதுவார் என்று கூறியிருக்கின்றீர்கள். பெற்றோரிடம் இருந்த போது இராசமாணிக்கமாக இருந்த உம்மை அப்பெயர் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்ற போது தமிழ்மணியாக மாற்றியவர் தாத்மாதானே. ஏழு அகவையில்எனக்கு இந்தப் பெயர் பிடிக்கவில்லை (வடமொழி எழுத்து வருவதால்) வேறு பெயர் வேண்டும்என்று நீங்கள் கேட்டதாகவும் மறுநாள் காலையில் நீங்கள் குளிக்கச் செல்லும் போது திராவிட மணி வேண்டுமா தமிழ்மணியாஎன்று தாத்மா கேட்டதாகவும், நீங்கள் தமிழ்மணியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவும் சொல்லியிருக்கின்றீர். திராவிடம் வேண்டாம் தமிழ்தான் வேண்டும் என்பது உம் பிறப்பின் நோக்கமாக இருப்பினும் அதை நோக்கி ஆற்றுப்படுத்தியது அ..கி.யின் திராவிட இயக்க ஈடுபாடுதான் என்பதை எண்ணி வியக்கின்றேன். பெரியார் மீதும், அண்ணா மீதும், கலைஞர் மீதும், .கோ.இரா. மீதும் நீங்கள் கொண்ட பற்றை நான் அறிந்தே இருக்கின்றேன். திருவூர் ஆசிரியப் பள்ளி மாணவராக இருந்த போதே விருகம்பாக்கம் தி.மு.க மாநாட்டிற்கு நீங்களும் புஞ்சை செல்வராசன் மாமாவும் சென்று வந்ததைச் சொல்லி இருக்கின்றீர். ஆசிரியப் பயிற்சிக் காலத்தில் இறைவணக்கப் பாடல் சுழற்சி முறையில் மாணவர்கள் பாடி வந்த நிலையில் உமது முறை வந்தபோது இறைவணக்கப் பாடலாகநீராரும் கடலுடுத்தஎனத்தொடங்கும் மனோன்மணியம் சுந்தரனாரின் பாடலைப் பாடி, தமிழ்த்தாயே எம் இறை என மாணவர்க்கு உணர்த்தியதாகவும் சொல்லியிருக்கின்றீர். அந்தப் பாடல் பின்னாளில் கலைஞர் ஆட்சிக்கு வந்தபின்னரே தமிழகத்தின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஆனது. அப்படிக் கடவுள் நம்பிக்கை அற்றவராகத் தாங்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியதற்கும் அ..கி.யே அடியெடுத்துக் கொடுத்தார் என்று கொள்ளலாம்தானே!

கடவுள் நம்பிக்கையற்ற நீங்கள் ஆசிரியப்பணியேற்ற தொடக்கக் காலத்திலேயே மாங்கால்  பள்ளியில் அம்மாணவர்களிடத்தில்பாழ்என்ற தலைப்பில் பேசியதாக உங்கள் பழைய மாணவர் ஒருவர் சொன்னார். நீங்கள் அவரின் தொடக்கக் கல்வியில் உணர்த்தியபாழ்அவரின் பணி ஓய்வுக்குப் பின் வேதாத்ரி அவர்களிடம் நிறைவுற்றதாகச் சொன்னார். அப்படி குருட்டுப் பாடமாக பகுத்தறிவைப் பேசாது தொடர்ந்த ஆய்வில் இருந்து கொண்டே இருந்தீர் என்பதையும் அறிவேன். தாங்கள் கொடுத்த பகுத்தறிவு வெளிச்சத்தில் நின்று நான் கடவுள் மறுப்பைக் கூறிய ஒரு நேரத்தில் வினா விடை வகையில் உங்கள் தேடலைஉயிர், ஊழ்கம் பற்றிய உம் கருத்துகளைவிளக்கிய சூழல் இன்றும் நினைவில் அசைவாடுகிறது. வெற்றியூரிலிருந்து நெமலிக்கு நடந்து சென்று கொண்டிருக்கிறோம். சற்குணம் அண்ணன் கழனி வரப்பில் செல்லும் போது அந்த உரை நிகழ்ந்தது.

அப்போதெல்லாம் பேராசிரியர் செகநாதன் அவர்களோடு பல மணிநேரங்கள் வேட்டாங்குளம் ஆற்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பீர்கள். நாங்கள் உங்கள் அருகில் அமர்ந்து புரிந்தும் புரியாமலும் கேட்டுக் கொண்டிருப்போம். பேராசிரியர் தங்கை சரசுவதி அவர்கள் தங்களை இறுதியாக வந்து பார்த்தபோது (நீங்கள் பேசாது படுத்துக் கொண்டிருந்த அந்த கொடிய நாளில்) அதைச் சொல்லி எங்கள் நினைவுகளைக் கிளறிவிட்டுச் சென்றார். வள்ளலாரைப் பற்றி, சித்தர்களைப் பற்றி உரையாடி விளக்கம் பெற நல்ல துணையாக உங்களுக்கு வாய்த்தவர் பேராசிரியர் செகநாதன் அவர்கள். அந்த தேடல் உமது தொடக்கக் காலத்திலேயே இருந்தது என்பதும் அதற்கு அப்போது தீனி போட்டவர் தமிழ்த்தென்றல் திரு.வி.. என்பதும் உம்வழியாகவே அறிந்து வைத்திருக்கின்றோம். அதனால்தான் நீங்கள் பாவலரேறு பாசறையின் படைத்தலைவரானீர்.

ஆம் அப்பா, ஆசிரியப் பணியில் மாங்காலில் தொடங்கிய இடையூறு தொடர்ந்து கொண்டே வந்தது. தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்ட பறையர் மாணவர்களையும், சக்கிலியர் மாணவர்களையும் மற்ற சாதி மாணவர்களுக்கு இணையாக நடத்த நீங்கள் மேற்கொண்ட முயற்சி, ஆசிரியர்களைஅண்ணாஎன்று அழைக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லித் தந்தது எல்லாம் உங்களை தி.மு.. உறுப்பினராக அடையாளம் காட்டியது. ஒன்றியக் கூட்டத்தில் தீர்மானம் போட்டு ஒன்றிய எல்லைப்புற ஊர்களுக்கு அலைகழிக்கப்பட்டீர்கள். அந்தச் சூழலில் புலவர் க. கோவிந்தன் அவர்களின் தொடர்பு ஏற்பட்டு அவரால் அந்த கட்சிக்கு அழைக்கப்பட்டீர்கள். ஆனால் அந்த வாய்ப்புகளை மறுத்து விட்டீர்கள். ஏனென்றால் பெரியார், வள்ளலார், திரு.வி.க ஆகிய மூவரையும் ஒரே உருவத்தில் காணும் அந்த வாய்ப்புக்காக உம் உயிர் காத்துக் கொண்டிருந்தது. பாவலரேறு என்ற அந்தப் பெருந்தகையைக் கண்டவுடன் அவர் வழி இயங்கத் தொடங்கியது. தி.மு..வில் இணைந்திருந்தால் ச..., அமைச்சர் என்று இழிந்து போயிருக்கலாம். பாவலரேறு கொள்கை மறவர் என்றதால் புடம் போடப்பட்டு புடம் போடப்பட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கின்றீர் அப்பா.

திருக்குறள் மெய்ப்பொருளுரையில் இறைமை, கடவுள், தெய்வம் ஆகியவற்றிற்கான விளக்கங்களை ஐயா அவர்கள் விளக்கும் போது உங்கள் தேடல் ஏன் ஐயாவிடம் சேர்த்தது என்பதை விளங்க வைத்தது. தமிழ் நெறியில் கடவுள் கோட்பாடு அறவே இல்லை என்பதை விளக்கி ஆற்றுப் படுத்தியிருப்பார் ஐயா.

பாவலரேறு ஐயா மொழி, இனம், நாடு என்ற முக்கொள்கைகளையும் கைக்கொண்டு தென்மொழி என்ற படைக்கருவியோடு தனித்து போர் செய்து வந்த நாள்களில் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் உருக்கொள்ளாத போதேதென்மொழி பயிலுநர் அவையை 1979இல் தொடங்கினீர். (சூரை முனிசாமி மாமாதான் உங்களுக்குத் தென்மொழியை முதன்முதலில் வாங்கித்தந்து அறிமுகம் செய்தார் என்று அவர் சொல்லக் கேட்டேன்) பின்னர் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட பின்னர் ஐயா அவர்களால் வடவார்க்காடு மாவட்ட அமைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டீர். வெள்ளுடை வேந்தராய் வலம் வந்த உமக்கு செந்துண்டு என்ற அணியும் சேர்ந்து அழகூட்டியது அப்போதுதான். ‘உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தினர் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது செஞ்சட்டையோ, செந்துண்டோ அணிந்து வர வேண்டும்என்ற ஐயாவின் கட்டளையே தங்களுக்கு செந்துண்டைத் தந்தது. அப்போது எனக்கு செஞ்சட்டை ஒன்றைத் தைத்து தந்ததும் மறக்கவொண்ணா நிகழ்வு.

ஐயாவைப் போல தாடி வைத்திருக்கின்றீர் என்று கூட பலரும் கூறுவர். தாடி ஐயாவைப் பார்த்து வந்ததல்ல என்பதை நாங்கள்தான் அறிவோம். வெற்றியூரில் நாம் குடியிருந்த போது ஒருமுறை தங்களுக்கு நச்சுக் காய்ச்சல் வந்தது. (வாதக் காய்ச்சல் அன்று). அந்த காய்ச்சலின் போது உம்மைப் பழைய நிலைக்கு மீட்டு வந்தவர் துரை அண்ணன் அவர்கள்தாம். ஒரு தாயாய், நல்ல சேயாய், துணையாய் உமக்கு வாய்த்தவர் அவர். அப்போதெல்லாம் அவரின் விடியல் உம் முகத்தில்தான் விடியும். நெமலியில் எழுந்து பல்குச்சியை வாயில் வைத்தபடி அவர் கிளம்பினால் வாய் கொப்பளிக்க வெற்றியூர் தண்ணீர்தான். கையில் பிடித்துக் கொண்டு வரும் சேட்டு அண்ணன் கடை ஆட்டுக்கால் உமக்குத் தெம்பூட்டும். வறிய நிலையில் இருந்த நமக்கு ஆட்டுக்கால் எல்லாம் தொடர்ந்து பயன்படுத்த முடியாதுதான். நம்மை விட வறிய நிலையில் இருந்தவர்தான் துரை அண்ணன். ஆனால் செய்ய வேண்டியதை செய்தே ஆக வேண்டும் என்ற துடிப்பு உங்களை அன்று காப்பாற்றியது. நாங்கள் செய்யத் தவறியதால் இன்று கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றோம். அப்படி அவரால் நலமடைந்த நீங்கள் மெலிந்த உருவில் தோற்றப் பொலிவில்லாமல் இருந்த சூழலில் ஒருநாள் துரை அண்ணன்ஐயா, தாடி வளர்த்துக் கொண்டால் கொஞ்சம் முகம் பார்ப்பதற்கு அழகாகத் தோன்றும்என்றார். அன்று தாடி வளர்க்கத் தொடங்கிய தாங்கள் பின்னாளில் அதுவே அழகாக இருப்பதால் அப்படியே விட்டு விட்டீர். நீங்கள் உங்கள் தந்தை முகம் மழிப்பதையே விரும்பாதவர். அரும்பு மீசையோடு, முறுக்கு மீசையோடு, தாடியோடு, வெள்ளுடையோடு, நீலவுடையோடு, வெற்றுக் கோவணத்தோடு எப்படிப் பார்த்தாலும் நீங்கள் அழகுதானே அப்பா!

உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட போது அதற்கான அறிவிப்புகள் தென்மொழியில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைகளை நாடாப்பதிவானில் தங்கள் குரலில் பேசிப் பதிந்து அவற்றை ஊர் ஊராகச் சென்று மக்களிடம் ஒலிபரப்பி, தொடக்க விழா மாநாட்டிற்கு மக்களைத் திரட்டினோம். வேட்டாங்குளம், நெமலி, தென்னல் திருமாற்பேறு, கண்டிகை போன்ற ஊர்களிலிருந்து பொது மக்களை அழைத்தோம். சரக்குந்து ஒன்றை அணியப்படுத்திக் கொண்டு அவர்களையெல்லாம் அழைத்துச் சென்றீர்கள். செஞ்சட்டையோடு நானும் வந்தேன். மாநாட்டில் காலை அரங்கம் மாணவர் இளைஞர் அரங்கம். நமது சரக்குந்து எல்லா ஊர்களிலும் ஆட்களைத் திரட்டிக் கொண்டு மாநாட்டுத் திடலை அடைந்த போது மாணவர் இளைஞர் அரங்கம் முற்றுப்பெற்று விட்டது. நான் அப்போது தங்களிடம் சண்டை போட்டது நன்றாக நினைவிற்கு வருகிறது. அந்த மாநாட்டில் பெருமளவு மக்களைத் திரட்டிச் சென்றது தாங்கள்தான் என்பது வரலாறு. நிகழ்ச்சியின் முடிவில் பெரியார் திடலிருந்து வீட்டிற்குச் செல்ல வண்டியில்லாத மாநாட்டுப் பொறுப்பினை ஏற்று நடத்திய மறை. நித்தலின்பன் ஐயா அவர்களின் குழுவினரை அண்ணாசாலை வழியாக அழைத்து வந்து இறக்கி விட்டு பின் ஊர் திரும்பியது பசுமையான நினைவாகவே உள்ளது.

உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட பின்னர் தாங்கள் மாவட்ட அமைப்பாளராகவும், ஐயா தன்னொளியனார் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பமர்த்தம் செய்யப்பட்டீர். வட்டப் பொறுப்புகளில் அறக்கோணம் வட்டச் செயலாளராக பெரியப்பா மு. கதிரவனாரும், செய்யாறு வட்டச் செயலாளராக ஆசிரியர் மா. சீராளன் அவர்களும் பொறுப்பு வழங்கப்பட்டனர். கிளையமைப்பு முயற்சிகளில் நீங்கள் முனைந்து நின்றீர்கள். பனப்பாக்கத்தில் கிளைத் தொடக்க விழாவும் கொடியேற்றமும் நடைபெற்றது. ஐயா ஏற்றி வைத்த உ..மு.. கொடி பட்டொளி வீசிப் பறந்தது. சானகியண்ணன், கதிரவனாக மாறிய பாசுகரன், புதூர் வெங்கடேசன் அண்ணன் போன்றோர் பனப்பாக்கம் கிளையில் உறுப்பினராகினர். ஆனால் ஏனோ தெரியவில்லை. பாவலரேறு கிளைகளைக் கட்டுவதைக் கொஞ்சம் தள்ளிப் போடுங்கள் என்று கூறியதாகச் சொன்னீர்கள். ஐயா அவர்களின் திட்டம் என்னவென்று இன்றுவரை நமக்குத் தெரியவில்லை. எனினும் தங்களின் மாணவர்கள் ..மு..வினர் இன்றும் பனப்பாக்கம், நெமலியில் நிறைந்து உங்களை நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அமைப்பு வழியில் அவர்கள் வெவ்வேறு அமைப்பாக இயங்கினாலும் உ..மு.கவின் ஏழு கொள்கைகளை தங்கள் வழியாக ஏற்றுப் பரப்பும் பணியைச் செவ்வனே செய்து வருகின்றனர்.

அந்தப் பாதையில்தான் எங்களின் தமிழ்நாடு இளைஞர் பேரவையின் பயணம், தமிழர் கழகத்தின் இயக்கம் இடையூறில்லாமல் தொடர்கிறது. புதிதாக யாரையாவது நாங்கள் சேர்த்தோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நற்றேவனை திராவிடர் கழகத்திலிருந்து தமிழ்நாடு இளைஞர் பேரவைக்கு அழைத்து வந்தது நாங்கள்தான் என்றாலும் அவரையும் அவரோடு திராவிடர் கழகத்திலிருந்து வந்த முருகேசன் போன்றவர்களையும் வழி நடத்தியவர் தாங்கள்தாமே. நாங்கள் மட்டுமென்ன தங்கள் விரல் பிடித்தே இன்று வரை தடம் பதிக்கின்றோம்.

புலவரை, தோழர் தமிழரசனை, பொன்பரப்பி இராசேந்திரனை, தோழர் தருமலிங்கத்தை யார் எமக்கு அறிமுகம் செய்தது? நீங்கள்தாமே! பொன்பரப்பி படுகொலைக்குப் பின்னர் அந்தச் செய்திகளைப் பார்த்து விட்டு குமரவேல் ஐயா என்னைத் தனியே அழைத்துச் சென்று தோழர் தருமலிங்கத்தின் படத்தைக் காட்டி, ‘அவரா இவர்என்று கேட்டார். ஆம் என்றேன். எத்தனை முறை நம்மோடு தோழர் பலரையும் சந்தித்திருப்பார். மாத்தூர் மக்களுக்கு அவர் என் மாமா என்றுதானே அறிமுகம்.

கல்லூரி நாள்களில் தென்மொழி அச்சகத்தில் மாலை நேரங்களைச் செலவிட்ட நான் கோடை விடுமுறைக்குத் திருச்சி செல்கின்றேன் என்ற போது, வருத்தத்தோடு மறுக்காமல் வண்டியேற்றி அனுப்பிய அந்தக் காட்சி இன்றும் கண்முன் வந்து கண்ணீரையும் துணைக்கழைக்கிறது. பூம்பொழில் அச்சகத்தில் பணி செய்யப் போகின்றேன் என்று சென்றாலும் நான் எதற்குச் செல்கின்றேன் என்று நன்றாக உணர்ந்ததால் தமது தடம் பதித்து தம் மகன் நடையிடுகிறான் என்ற மகிழ்வு இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டிய துன்பங்களை எண்ணி நீங்கள் கலங்கியதை அறிவேன்.

தமிழ்நாடு உழவர் பேரவை கட்டுவதிலும் தமிழ்நாடு இளைஞர் பேரவை அமைப்பதிலும் தாங்கள் எங்களோடு காட்டிய பேரவாபேருழைப்புஎண்ண எண்ண இன்பம் தருவனவே. தோழர்கள் மாறன், குணத்தொகையன், பவணந்தி, பொழிலன் ஆகியோர் மாத்தூரில் தங்கியிருந்து மக்களைக் கண்டு கருத்துப் பரப்பிய போது எங்களைத் தாங்கியது தாங்கள்தாமே!

1988இல் ஆளுநர் ஆட்சியின் கொடுமைகள் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு இளைஞர் பேரவை, தமிழ்நாடு உழவர் பேரவை அமைப்புகளை சிதற அடித்த போதும் உறுதியாக இருந்து புயலுக்குப் பின்னும் இயக்கத்தை உயிர்ப்பித்தது உமது செயல்தானே!

எமக்கு முன்பாகச் சிறைபட்டாலும் சட்டப்புறமாக ஏறத்தாழ ஒரு மாத காலம் காவல் துறையின் பிடிக்குள் சிக்கித் துன்புறுத்தப்பட்ட சூழலிலும் என்னையும் இனிக்குட்டியையும் மதுரை சிறை வாவென்று அழைத்தபோது நாங்கள் வெற்றியூரில் இருந்த அதே மகிழ்வான மனநிலையில் இருக்கச் செய்தது உங்கள் ஆதரவும் அரவணைப்பும்தானே.

ஆசிரியர் அரசு ஊழியர் போராட்டத்தின் போது முதல் நாள் போராட்டத்தில் அறக்கோணம் வட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களில் யாருமே தளைப்படத் தயங்கிய போது அந்தத் தயக்கத்தை உடைத்தெறிந்து காவல்துறை வண்டியில் முதலில் ஏறி வழிகாட்டிய பெருந்தகை நீங்கள் அல்லவா? அதன் பின்னரே பன்னிருவர் உங்களைத் தொடர்ந்தார்கள் என்பது வரலாறல்லவா? அந்த நெஞ்சத் துணிவுதான் என்னையும் முரட்டுப் பிள்ளையாக்கி வைத்துள்ளது என்பதும் உண்மைதானே.

சிறை மீண்டு வந்தபின் தொடர்ந்து தமிழ்நாடு இளைஞர் பேரவை வேலைகளில் ஈடுபட்ட எம்மை இயக்கியது நீங்கள்தாமே! ஆசிரியர் பன்னீர்ச்செல்வம் அவர்களின் மகளும் தமிழிசையின் தோழியுமான கண்ணகியின் திருமணத்திற்கு பாவலரேறு தலைமை. அன்றே பனப்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடத்த நாங்கள் திட்டமிட்டோம். பாவலரேறு அவர்களின் வருகையை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தக் கூட்டத்தை அணியப்படுத்தினோம். கூட்டத் தலைமை நான். திருமணம் சிறப்புற நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட ஒளிப்படத் தோற்றம்தான் பாவலரேறு அவர்களின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் உயர்த்திப் பிடித்த படங்களாகவும், இன்று தமிழிசை கணினிச் செயலகச் சுவரின் ஓவியமாகவும், என் திருமணத்தின் போது பின்னணியில் வைக்கப்பட்ட படமாக அமைந்ததாகும். அன்று பகல் உணவின் போது பொதுக்கூட்டத்திற்கு போவது பற்றிக் கேட்ட போது ஐயா, ‘தம்பி! நான் கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றி எங்கள் மாவட்ட அமைப்பாளரிடம் சொன்னீர்களா? அவர் இசைவில்லாமல் நான் எப்படி கலந்து கொள்வது?’ என்று கேட்டார். கூட்ட ஏற்பாடு முதற்கொண்டு உங்கள் துணையோடே செய்து வரும் எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. நீங்கள் உ..மு.. என்றும் நான் தமிழ்நாடு இளைஞர் பேரவை என்றும் இயங்கத் தொடங்கிய பின்னர் நமக்குள் உள்ள கொள்கை உறவு எத்தன்மையது என்று அறிந்து கொள்ளும் நோக்கத்தோடே ஐயா அவ்வாறு வினவியிருக்கலாம். தோழர் பொழிலன் அவர்களோடு சேர்ந்து நாம் இயங்கி வருகின்ற சூழலில் அவருக்கும் ஐயாவுக்கும் இடையேயான சிறுசிறு மாறுபாடுகளால் அவ்வினா வெளிப்பட்டிருக்கலாம். ஆனால் என்றைக்கும் நான் உங்கள் பிள்ளையாகவே இருந்து வருவதைத் தாங்கள் அறிவீர்கள்.

தங்களோடு பல நிலைகளில் மாறுபாடு கொண்டு சண்டை போட்டவன்தான் நான். தங்களின் எல்லா கருத்துகளோடும் உடன்பட்டுவிட முடியாத நிலையில் உள்ளவன்தான் நான். ஆனாலும் அந்தக் கருத்துகள் எவ்வளவு வலிமையாகத் தங்களிடம் சொல்லப்பட்ட போதிலும் முடிவு செயலுக்கு வருகின்ற போது அது தங்களின் வினைதானே தவிர எம் வினை என்று எதுவும் இல்லை. எம் கருத்தை ஏற்க வைத்தோம் என்ற சூழல் எப்போதாவது ஏற்படும் என்றாலும் தாங்கள் ஏற்றுக் கொண்டாலே அது செயலாகும். இல்லையென்றால் அது முகிலனின் கருத்தாக மட்டுமே இருக்கும் என்பதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள்.

அப்பா, தங்களின் சிறகிலேயே எம்மை இருக்கச் செய்யாதீர்கள்; எம்மைப் பறக்க விடுங்கள் என்று பலமுறை நான் மன்றாடியிருக்கின்றேன். ஆனாலும் உங்கள் அன்புச் சிறையில்தான் நாங்கள் அடைபட்டுக் கிடந்தோம். எந்தத் தந்தைக்கும் கிடைக்காத வாய்ப்பு அதனால்தான் உங்களுக்குக் கிடைத்தது. உங்கள் ஐந்து பிள்ளைகளும் உங்கள் பார்வையிலேயே இருக்கின்றவாழ்கின்றசூழலை உங்களின் அன்புதான் ஏற்படுத்தியது. தங்கை தமிழிசை தம் இறுதி மூச்சை உம் நிழலில் அல்லவா நிறுத்திக் கொண்டார்.

அப்பா, கண்ணீருக்கிடையில் இம்மடலை எழுதிக் கொண்டிருந்தாலும் அடிநெஞ்சில் ஒரு நிறைவைமகிழ்வைத் தருகின்றது. நம் பாட்டனின்இன்னா தம்ம இவ்வுலகம்; இனிய காண்கிதன் இயல்புணர்ந் தோரேஎன்ற வரிகளின் உண்மைப் பொருளை இந்த இரண்டு நாள்களில் நான் முழுமையாக உணர்ந்தேன். ஒற்றை விளியில் உசுப்பி விட்டு இரண்டு நாள்களும் உம் நினைவிலேயே கரைய வைத்த தந்தையே விடை பெறுகிறேன். தொடர்ந்து துணையிருக்க வேண்டுகின்றேன்.

அன்புடன்
தமிழ். முகிலன்

சனி, 22 பிப்ரவரி, 2014

தேர்தல் நம் பார்வை



(தமிழர் எழுச்சி மாத இதழின் ஆசிரியருக்கு எழுதிய மடல்)
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்.
நம் தமிழர் எழுச்சி  சுறவம் 2045 (சனவரி 2014) இதழின் ஆசிரியவுரையில் ஆம் ஆத்மி கட்சியின் சாதனைகளை உவந்து பாராட்டி எழுதியிருந்தீர்கள். ஆம் ஆத்மியிடமிருந்து பாடம் கற்க வேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஒவ்வொரு வரலாற்று நிகழ்விலிருந்தும் நாம் பாடம் கற்கத்தான் வேண்டும். ஆனால் ஆத்மியைப் பாராட்டுகின்ற போதே தமிழியக்கங்களின் மீதான தங்களின் திறனாய்வை - வெறுப்புணர்வைஅது இயலாமையின் வெளிப்பாடாக இருந்த போதிலும் எம்மால் முழுமையாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
அதிலும்எங்காவது ஓரிடத்தில் வெடிகுண்டு தாக்குதல் செய்யப் போவதாகக் கூறி….’ எனத்தொடங்கும் தங்களின் திறனாய்வை நீங்கள் யாரை மனதில் வைத்துக் கொண்டு எழுதினீர்களோ அவர்களோடு அந்த நிகழ்வில் பங்கு கொண்டவன் என்ற முறையிலும், ஓர் அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியுமா? ஈழ விடுதலைக்கு உண்மையான ஆதரவு தமிழக மக்கள் விடுதலைப் போராட்டமே என்ற கருத்தை வலியுறுத்தி பரப்புரை செய்து வரும் அமைப்பைச் சார்ந்தவன் என்ற முறையிலும் சில சொல்ல வேண்டியுள்ளது.
விடுதலையின் எல்லையில் நின்று கொண்டிருந்த ஈழப்போராட்டம் இந்திய உதவியினால் சீர்குலைக்கப் பெற்று தொடங்கிய இடத்திற்கும் பின்னால் போய்விட்டதைப் பார்த்தும், முப்பது ஆண்டுகாலம் உலகம் வியக்கும் போரை நடத்திய தேசியத் தலைவரால் தமிழீழம் பெற முடியாதாம். முதலில் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு விடுதலைப் பெற்றால்தான் தமிழீழம் பெற முடியுமாம். இவர்கள் இதைப் பெற்றப் பின்னர் அங்கே போய் தமிழீழம் பெற்றுத் தந்து விடுவார்களாம். நம்புவோம்! நம்புவோம்!’ என்ற தங்களின் எள்ளலில் எம்மைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். நாங்கள் எந்த இடத்திலும் தமிழக விடுதலை  பெற்ற பின்னரே தமீழீழம் விடுதலை பெற இயலும் என்று கூறியதில்லை.
பஞ்சாப், நாகா, அசோம், மிசோரம், காசுமீர் விடுதலைப் போராட்டங்களை எப்படி ஆதரிக்கிறோமோ அதைக்காட்டிலும் நம் தமிழினத்தவர் என்ற நிலையில் ஈழப்போராட்டத்தில் அதிக அக்கறையும் பங்களிப்பும் உண்டு என்பதை உணர்ந்தவர்கள் நாங்கள். ஆனால் எந்த விடுதலைப் போராட்டத்திற்கும் ஆதரவான நம் களம் என்பது நம் தமிழ்நாடு என்பதை உணர்ந்த காரணத்தால், தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தை நடத்துவதே ஈழத்திற்குச் செய்யும் உண்மையான ஆதரவாக அமையும் என்று கருதுகின்றோம். சோம்பித் திரியும் இந்தியப் படைக்கு ஈழ அழிப்பு என்ற வேலையைத் தருகிற இந்தியாவை எதிர்த்து தமிழ்நாட்டில் ஓர் விடுதலைப் போராட்டம் நிகழுமானால் இந்தியாவின் பார்வை ஈழத்தின் மீது செல்லாது தமிழகம், மிசோரம், பஞ்சாப் போன்ற நாடுகளின் மீதே நிலைத்திருக்கும்; சிங்களம், இந்தியா என்ற இரட்டை எதிரியை எதிர்கொள்ள வேண்டிய துன்பச் சுமை ஈழப்போராளிகளுக்கு சற்று குறைந்திருக்கும்; தமிழகத்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் அறவழிப் போராட்டங்கள் என்ற சட்ட வழியிலான போராட்டங்களாக இல்லாமல் கருவிப் போராட்டங்களாக மாற்றம் பெற்றிருக்கும். ஆனால் இன்று வரை தமிழ்நாட்டுத் தமிழர்கள் தம் அடிமைத்தனத்தைப் பற்றிப் பேசாமல் ஈழத்தமிழரின் உரிமை பற்றியே பேசி வந்ததால் ஓலமிட்டு ஒப்பாரி வைக்கக் கூட இயலாமல் முள்ளிவாய்க்காலை வேடிக்கைப் பார்க்க நேர்ந்தது. உண்மையாகவே நாம் இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தை சற்று முன்னுக்குத் தள்ளியிருந்தாலே ஈழப்போரில் இன்று ஏற்பட்டுள்ள பின்னடைவு நேர்ந்திராது.
தங்களின் எள்ளலை நாங்கள் தலைகுனிந்து ஏற்றுக் கொள்கிறோம். எம் போராட்டம் தம் பாதையிலிருந்து வழுவி ஒலிவாங்கியையும், எழுது கோலையும் கருவிகளாகக் கொண்ட போராட்டமாக மாறியதன் இழிந்த நிலைக்கான பாராட்டுப் பத்திரமாக அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் வரலாறு இந்த இடத்திலேயே நின்று விடாது என்பதையும் எண்ணி ஆறுதல் அடைகிறோம்.
அதே நேரத்தில் இன்னொன்றையும் தெளிவுபடுத்திட விரும்புகின்றேன். ஏனெனில் தாங்கள் முன்னிதழின் அட்டைப் படத்தில் படம் போட்டுப் பாராட்டி, அடுத்த இதழிலேயே விளக்குமாற்று அடி கொடுக்குமளவிற்கு தேர்தல் பற்றிய நிலைப்பாட்டில் முரண்பட்டு நிற்கும் அவர்களின் நிலைப்பாட்டில் நான் இல்லை என்பதையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
எல்லாத் தளத்திலும் நம் தமிழ்நாட்டு விடுதலைக்கான பணி நடைபெற வேண்டும் என்பதில் அசையாத விருப்பம் உள்ளவன் நான். ‘தேர்தல் பாதை திருடர் பாதை; மக்கள் பாதை புரட்சிப் பாதைஎன்ற முழக்கத்தில் உள்ள அறியாமையை உணர்ந்திருக்கிறேன். மக்களின் படிநிகராளிகளை ஏதாவது ஒரு வடிவில் தேர்ந்தெடுக்கவே இயலும். தேர்தல் இல்லாமல் தேர்ந்தெடுத்தல் எப்படி? கட்சியின் அரசியல்குழுவைத் தேர்ந்தெடுக்கவும் ஒரு தேர்தல் தேவைதானே?
இந்திய அரசியல் அமைப்பை ஏற்றுக் கொள்கிறேன்என்ற உறுதிமொழி தந்து போட்டியிடுகிற இந்த தேர்தலை நாம்  புறக்கணிக்கிறோம் என்பது ஓர் அரசியல் நிலைப்பாடுதான். நாம் புறக்கணிப்பதால் இந்தியத் தேர்தல் நடைபெறாமல் போய்விடுகிறதா? இல்லையே.
தேர்தல் புறக்கணிப்பை ஓர் அரசியல் ஆக்காமல், இந்தியத் தேர்தல் நடத்துவதைத் தடுக்காமல் நாம் ஒப்போலை போடுவதிலிருந்து ஓய்வெடுத்துக் கொள்வதை தேர்தல் புறக்கணிப்பு என்று என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
அதே நேரத்தில் தேர்தலில் ஈடுபட்டு இன்னும் பத்தாண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்றி விடுவோம் என்றதான மாயையும் நமக்கில்லை. தமிழ்நாட்டு விடுதலை என்பது கருவியேந்திய மக்கள் போரின் மூலமே அமையும் என்பதில் துளியும் ஐயமில்லை. ஆனால் அந்த மக்களை அணி திரட்டுவதற்கும் அந்த மக்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்கும், அளவிடுவதற்கும் இன்றையச் சூழலில் தேர்தலை விட எளிதான கருவி எது?
ஆண்டு கொண்டிருக்கும் இந்திய, திராவிடக் கட்சிகளின் போலிமைகளை விளக்கப்படுத்தி உணர்ந்து கொண்ட மக்களைப் பார்வையாளர்கள் நிலையிலிருந்து பங்கேற்பாளர் என்ற நிலைக்கு உயர்த்திட தேர்தலைத் தவிர வேறு கருவி இன்று வாய்த்திட வில்லையே!
ஆட்சி அமைப்பதற்காக அல்ல; நம் பலம் என்ன என்று காட்டுவதற்காகஅறிந்து கொள்வதற்காகதமிழ்த்தேசிய அணி தேர்தலில் ஈடுபட வேண்டும் என்று கருதுகிறேன். ‘கருவி வழியிலே விடுதலையை வென்றெடுப்போம்; இந்தியத் தேர்தலைப் புறக்கணிப்போம்என்று கூறும் புரட்சியாளர்கள் புலிகளைப் போல் தேர்தலில் ஈடுபடாதிருக்கட்டும். ஆனால் புலிகள் அமைத்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் போல் இங்கும் ஓர் கூட்டமைப்பு வேண்டும். அதற்கு புரட்சியாளர்களும் உதவிட வேண்டும் என்பதே எம் நிலைப்பாடு.
இந்த நிலைப்பாட்டோடே தேர்தலை நாம் அணுக வேண்டுமே யன்றி ஆம் ஆத்மியின் வெற்றியினைப் பார்த்து அதுபோல் நாமும் வென்று விடலாம் என்று கனவு காண்பது சரியல்ல என்பது எம் கருத்து.
ஊழல் மட்டும் சிக்கல் என்றால்
ஆம் ஆத்மி சரிதான்;
ஆனால்,
எங்களுக்கு இந்தியாவே சிக்கல் என்றால்…’
என்றொரு துணுக்கை இணையத்தில் கண்டேன். இதையே தங்கள் முன் வைக்கிறேன்.
அன்புடன்
தமிழ். முகிலன்
மாத்தூர்

புதன், 10 மார்ச், 2010

தமிழொளி: வாழ்வியல் முப்பது

தமிழொளி: வாழ்வியல் முப்பது

வாழ்வியல் முப்பது

வாழ்வியல் முப்பது
பாவலரேறு பெருஞ்சித்திரனார்


புகழ்ச்சியின் மயக்கறு!
புன்மையை உதறு!
இகழ்ச்சியைத் தாங்கு!
எள்ளலை எடுத்தெறி!
நிகழ்ச்சியை வரிசைசெய்!
நினைவை உறுதிசெய்!
மகிழ்ச்சியும் துயரமும்
மனத்தின் செயல்களே!

பாடல் - 1 உரைக்குறிப்புகள் : (எண் அடிகள் எண்)
1. புகழ்ச்சியின் மயக்கு-பிறர் கூறும் புகழ்ச்சியுரைகளால் ஏற்படும் உணர்வுக் கிறக்கம்; அறுத்தல்-அடியோடு நீக்குதல்.
2. புன்மை-இழிவாம் தன்மை; உதறுதல்-பற்றப் பற்றத் தவிர்த்தல்.
3. இகழ்ச்சி-செயப்பெறும் நல்வினைகளின் மேல் அறியாமையால் கூறப்பெறும் இகழ்ச்சியுரைகள்.
4. எள்ளல்-அருமை வினைகளை எளிமையாகக் கருதி உரைக்கப்பெறும் புன்சொற்கள்.
5. வரிசை-செயப்பெறும் வினைகளை அறிவானும் வினையானும் வகைப்படுத்தி இடத்தானும் காலத்தானும் பொருந்த அமைத்துக் கொள்ளுதல்.
6. நினைவை உறுதி செய்தல்-செயத் தக்கவற்றுக்கும் தகாதனவற்றிற்கும் வேராகிற நினைவுகளை அறிவான் தேறி செயலுக்குரியனவாகத் தெரிந்தெடுத்தல்.
7,8. மகிழ்ச்சி என்பதும் துயரம் என்பதும் செயப் பெறும் வினைகட்கு ஏற்ப மனம் அவ்விடத்துப் பெறும் உணர்வு முடிபுகளுக்கான பெயர்களாகும்.

ஊக்கமும் முயற்சியும்
உண்மையும் நேர்மையும்
ஆக்க வினைகளும்
அடிப்படைக் கொள்கைகள்!
ஏக்கம் அகற்று!
ஏறுபோல் வினைசெய்!
தாக்கும் இழிவுகள்
தாமே விலகிடும்.

பாடல் - 2 உரைக் குறிப்புகள்:
1-4. மனவெழுச்சியும் அறிவு, உடல் இவற்றின் வழித்தாகிய முயற்சியும், தோற்ற நிலை முதல் முடிவு நிலை வரை உணர்வு தலைமாறாத உண்மையும், நடுநிலை பிறழாத நேர்மையும், அவற்றின் வழி விளைக்கப்பெறும் ஆக்கச் செயல்களும் மாந்தவினம் முழுமைக்கும் பொதுவான கொள்கைகள் ஆகும் எனத் தேர்க.
5. ஏக்கம்-ஒன்றைப் பெற வேண்டி உயர்ந்து நிற்கும் மனவுணர்வு.
6. விலங்கினக் கடாப் போலும் வினைக்கண் இடர்ப்பாடு வந்தவிடத்தும் தளராது இயங்குதல். (மடுத்த வாயெல்லாம்... குறள் எண் 624)
7,8. நுண்பொருள் இயக்கக் கொள்கைப் படி முடுக்க வினை புறத்தாக்கு வினைகளை வலிவிழக்கச் செய்யும் என்க.

இன்றைய நாள்நினை!
இனிவரும் நாள்நினை!
என்றும் புதியன்,நீ!
யாவும் புதியன!
அன்றன்றும் புதுநாள்!
அனைத்தும் இனியன!
ஒன்று,கை போகின்
ஒன்றுன் கைவரும்!

பாடல் - 3 உரைக் குறிப்புகள்:
1. நாளின் வரவையும், வரவின் செலவையும் கொன்னே அது கழியும் வெறுமையும் நினைக்க.
2. அறியா நிலையின் வறிதே கழிய விட்ட நாள் போயினும் அறிந்த நிலையின் இனிவரும் நாள் பயன் கொள்க என்றபடி.
3,4. ஒவ்வொரு நாளும் உயிரும் மெய்யும் இவை வேறாய பருப்பொருள்களும் தத்தம்மளவில் அகத்தும் புறத்தும் மலர்ச்சியுறுதலான் உயிர்மெய்யுள்ளிட்ட அனைத்தும் அன்றன்றும் புதியனவே என எண்ணிப் புத்துணர்வு பெறுக.
5. உயிர்ப் பொருளும் உயிரல் பொருளும் புதியனவாகையால் ஒவ்வொரு காலக்கூறும் புதுமையே என உணர்க.
6. உயிர் இனிமையெனின் உயிர் வளர்ச்சிக்குற்ற சூழல்கள் அனைத்தும் இனியனவே என்பது மெய்ப்பொருள் கொள்கை.
7,8. உயிரும் உயிர்த் தொடர்பாய வினைகளும் ஒரு நெடுந் தொடரி போல் நிரலுடையனவாகலின் ஒன்று கைவிட்டுப் போதலும் மற்றொன்று கை வந்து சேர்தலும் இயல்பு நிகழ்ச்சிகள் என்க. எனவே கை கழிந்தது பற்றிக் கவலுறாது, கை மலிந்தது பற்றி மகிழ்வுறுக என்பதாம்.

உள்ளம் விழைவதை
அறிவினால் ஓர்ந்துபார்!
தள்ளத் தகுவன
உடனே தள்ளுவாய்!
தள்ளத் தகாதென்
றறிவு தேர்வதைக்
கொள்ள முயற்சிசெய்!
கொடுநினை வகற்று!

பாடல் - 4 உரைக் குறிப்புகள் :
1,2. உள்ளுணர்வுக் கிளர்ச்சியை அறிவினால் எண்ணியாய்ந்து கொள்ளுக!
3,4. தன்னுயிர் நிலைக்குப் பொருந்தா நிலைகள் என்று அறிவு தெளிய வைப்பனவற்றை அவ்வப் பொழுதிலேயே தள்ளிப் புறத்தொதுக்குக!
5-7. உயிரியக்கத்திற்குப் புறப்படுத்தக் கூடாதது - தள்ளி வைக்கத் தகாதது என்று அறிவு ஆய்ந்து தேறியதை அகப்படுத்திக் கொள்ளுக!
8. உள்ளத்தை வளைய வைக்கும் கொடிய நினைவுகளை அகற்றுக!

உயர்வாய் நினைப்பன
உன்னை உயர்த்தும்!
மயர்வாம் நினைவுகள்
அறிவையும் மயக்கும்!
துயர்வுறும் வினைக்குத்
துணிவுகொள் ளாதே!
அயர்வின்றி இயங்கு
ஆக்கம் துணைவரும்!

பாடல் - 5 உரைக் குறிப்புகள்:
1,2. உயர்வாய் எண்ணுதல் - மேலானவற்றை எண்ணுதல்; உயர்த்தல் - மேனிலையில் நிறுத்தல்.
3,4. மயர்வு - தெளிவில்லாமல் குழம்பிக் கிடக்கும் நினைவுகள். மனமயக்கம் அறிவையும் மயங்கச் செய்யும்.
5,6. துயர்வுறும் வினை - முடிவில் துன்பத்தைத் தரும் வினை.
7,8. அயர்வு - வினைச்சோர்வு; ஆக்கம் துணை வரும் - வினையளவான் விளைகின்ற ஆக்கம், அடுத்தடுத்துச் செய்யும் வினைகளுக்குத் துணை நிற்றல்.

ஒழுக்கமே உன்றனை
உயர்த்திடும் படிநிலை
இழுக்கம் இழுக்கு!
இழிவுறும் அதனால்!
பழக்கம் கொடியது!
பண்புபொன் மகுடம்!
இழக்கும் பொழுதுகட்(கு)
ஈட்டம் நினைந்துபார்!

பாடல் - 6 உரைக் குறிப்புகள்:
1,2. ஒழுக்கம் - மன, மொழி, வினைகளால் நேர்பட ஒழுகுதல், உலகச் சிறப்பு நடை.
3,4. இழுக்கம் - தாழ்வுறுதல்; இழுக்கு - கீழ்மையும் பழியும்
5. பழக்கத்திற்கு அடிமையாதல் நம்மைத் தாழ்ச்சியுறச் செய்யும்; கொடியது - தாழ்ச்சியுறச் செய்வது.
6. பொன் மகுடம்: பொன்முடி - நிலையானும் தகுதியானும் அரச மதிப்படையச் செய்வது.
7,8. பொழுதை இழந்து வினைப்பயன் பெறுதல்.

ஒவ்வொரு நொடியும்
உனக்கென வாய்த்தது!
எவ்வொரு நொடியும்
இழத்தல்செய் யாதே!
இவ்வொரு நொடிக்கே
ஏங்கி யிருந்ததாய்
அவ்வொரு நொடியும்
அளாவிப் பயன்பெறு!

பாடல் - 7 உரைக் குறிப்புகள்:
1,2. வாழ்வுக் காலத்தே வந்து விரைந்து செல்லும் ஒவ்வொரு மணித்துளியும் நமக்காகத்தான் வாய்த்தது என எண்ணி வினை செயல் வேண்டும்.
3,4. எந்தவொரு மணித்துளியும் வெறுமனே பயனற்றுப் போகுமாறு வினை செய்வதை இழந்து விடாதே! (அவ்விழப்பு ஈடு செய்யவொண்ணாது!)
5-8. வருகின்ற அந்த ஒரு மணித்துளிக்காகத்தான் நாம் ஏங்கிக் காத்திருந்தோம் என்னும் மன ஆர்வத்துடன், ஒரு சிறு பொழுதையும் இழந்து விடாமல் வினைப்பட்டு முழுப்பயன் பெறுமாறு அளாவி ஈட்டம் கொள்ளுதல் வேண்டும் என்க.

நேற்றெனல் வேறு!
இன்றெனல் வேறு!
நேற்றிருந் ததுபோல்
இன்றிருந் திடாதே!
நேற்றினும் இன்றுநீ
நெடிது வளர்ந்துளாய்!
நேற்றைய வளர்ச்சியுள்
நினைவொடுக் காதே!

பாடல் - 8 உரைக் குறிப்புகள்:
1,2. நேற்று என்று சொல்வது அது கடந்து போனது ஒன்றானதால் வேறு. அதுபோல் இன்று என்று சொல்வது கடக்க வாய்த்திருக்கின்ற பொழுதாயினதால் இது வேறு.
3,4. நேற்றிருந்த அதே நிலையில் இன்றைக்கும் இருந்திடல் கூடாது. (ஏனெனில் காலம் வளர்ந்து புதிய பொழுதுகள் முளைத்துக் கொண்டேயிருக்க, நாமும் முந்திய அதே கால நிலையிலேயே இருத்தல் கூடாதென்பதாம்.)
5,6. நேற்றினும் இன்றைக்கு அகத்திலும், புறத்திலும் உயர்வாக வளர்ந்திருக்கின்ற நிலையினை எண்ணி, மேலும் புதிய வளர்ச்சிக்கு ஊக்கங் கொள்ளுதல் வேண்டும் என்க.
7,8. நேற்றைய வளர்ச்சி, நேற்றைய அகப்புறத் தழைப்பாதலின் அதுபற்றியே எண்ணி, இன்றைய பொழுதை ஈட்டமின்றிக் கழித்துவிடல் கூடாது என்பதாம்.

நேற்றைய நினைவுகள்
இன்றைய செயல்கள்!
நேற்றைய அறிவோ!
இன்றறி யாமை!
நேற்றைய அடிக்குமேல்
நெட்டடி இன்றுவை!
நேற்றுநீ காற்றெனில்
நீள்விசும் பின்றுநீ!

பாடல் - 9 உரைக் குறிப்புகள்:
1,2. இன்றை வினைப்பாடுகள் யாவும் நேற்றைய எண்ண மலர்ச்சியின் விளைவே! நேற்றைய எண்ண அளவும், அதன்வழி வினையளவும் தெரியவே இன்றைய எண்ண ஆற்றலை மிகுவிக்க!
3,4. நேற்று அறிவென எண்ணியது, இன்றைய வளர்ச்சியில் அறியாமையாகவும் இருக்கலாம் எனக் கொள்ளுக!
5,6. நேற்றைய வளர்ச்சிக்கென எடுத்த முயற்சியை (அதன் வினையளவு தெரிதலான் மேலும் வலியதாக இன்றைக்குச் செய்க.
7,8. நுண்மையும், வன்மையும், நீண்மையும் உடைய காற்றுப் போலும் நேற்றிருந்தாயெனில், அக்காற்றையும் உள்ளடக்கித் தற்சார்புடையதாகவுள்ள நெடிய வான் போல் இன்றைக்கு விளங்குக!

உன்றன் விழிகளை
உயர்த்துக வானில்!
உன்றன் செவிகளை
உலகெலாம் பரப்புக!
குன்றுபார்! கதிர்பார்!
கோடிவிண் மீன்பார்!
நின்றுபார்! நடந்துபார்!
சிறுநீ, உலகம்!

பாடல் - 10 உரைக் குறிப்புகள்:
1,2. விழிகளை உயர்ச்சியும் விரிவும் தூய்மையும் சான்ற வான் நோக்கி உயர்த்துக! விழியை உயர்த்தவே, மனமும் அறிவும் தாமே உயர்வனவாகும் என்க.
3,4. செவிகளை உலக முழுமையும் பரப்பிக் கொள்ளுக! பரப்பவே, உலகின் மூலை முடுக்குகளினின்று வெளிப்படும் அனைத்து அறிவு நிலைகளும் கேள்வியால் உணரப்பெறும் என்க.
5,6. உயர்ந்து நிற்கும் குன்றையும், ஒளிபரப்பும் கதிரையும், எண்ணத்திற்கு எட்டாதனவும், அளவிடற்படாதனவுமாகிய விண்மீன் கூட்டங்களையும் பார்த்து மனத்தை அவ்வாறு சிறக்கச் செய்க என்பதாம்.
7,8. இயக்கமின்றி ஓரிடத்தில் அமைவாக நிற்க; நின்று பின் இயங்குக; இயங்குகையில் கால்களாலேயே நடக்க, இங்ஙன் இயற்கையைத் துய்க்க, அதனொடு உன்னை ஒப்பிடுக. அக்கால் நாமும் ஒரு சிறு உலகம் என்பதை உணர்தல் இயலும்.

சிற்றுயிர் எறும்பும்
சுற்றுதல் காண்,நீ!
மற்றுயிர் எல்லாம்
இயங்குதல் மதித்துணர்!
அற்றெனில் நீ,ஏன்
அமர்ந்திங் கிருப்பது?
கற்றுவா; எண்ணிவா;
காற்றில் நனைந்துவா!

பாடல் - 11 உரைக் குறிப்புகள்:
1,2. சிற்றுயிர் வகைகளில் ஒன்றான எறும்பும் அயர்வின்றிச் சுற்றிச் சுற்றி யியங்குதலைக் காண்க என்பதாம்.
3,4. அதே போலும், எல்லா உயிர்களும் அதனதன் நிலை யியக்கங்களில் மாறுபடாது இயங்கி நிற்றலைப் பெருமையோடு போற்றி உணர்க!
5,6. உயிரிகள் அவ்வாறு முறையாக அவ்வவற்றின் நிலைக்கேற்ப அயர்வின்றி இயங்குதலைக் உணர்ந்தபின், அதே உயிர் வகைகளின் மேனிலையுயிரான மாந்தவினத்தே ஒரு கூறான நாம் மட்டும் எதற்காக ஓரிடத்திலேயே அமைந்து கொண்டு வாளாவிருக்க வேண்டும்? நாமும் நம் உயிர் நிலைக்கேற்ற உயர் இயக்கங்களில் மேம்பட்டு அயர்வின்றி இயங்குதல் வேண்டும் என்பதாம்.
7,8. தொடர்ந்து கற்றலில் திளைத்து வருக! மாந்த உயிரினத்திற்கு மட்டும் அரிதின் அமர்ந்த எண்ணத்திடை மூழ்குக! மனம் எண்ணத்திடை மூழ்கையில் உடல் காற்று நிரம்பிய வெட்ட வெளியிடை மூழ்கட்டும்!

மலைமுக டேறு
மடுவினில் இறங்கு!
கலைகுவி சோலையுள்
காற்றாய் நுழைந்துபோ!
அலைவீட் டுள்புகு!
ஆற்றினில் நீந்து!
புலைநினை வழிந்திட
இயற்கையுள் புதை,நீ!

பாடல் - 12 உரைக் குறிப்புகள்:
1. எண்ணத்தாலுமன்றி மெய்யாலும் உயரமான மலைகளின் உயர்ச்சியாம் முகட்டில் ஏறி உணர்க! உடலை உயர்த்துகையில் எண்ணங்களும் தாமே உயர்வன காண்க!
2. ஆழமான நீர்நிலையிலும் இறங்கியாடுக! (உயர்ச்சியில் ஏறுதலும், ஆழத்தில் இறங்குதலும் வாழ்வமைப்பில் நம்மை நிலைநிறுத்திக் கொள்ளவுமாகலின்.)
3,4. கலையழகு குவிந்துள்ள பூஞ்சோலைகளில் காற்று நுழைந்து போவது போலும் மனமணைந்து நுழைந்து இயற்கை யின்பம் துய்த்தல் வேண்டும் என்பதாம்.
5. நீர்க்கூரையால் வேயப்பெற்றது போலும் எம்பி அளாவி மறையும் அலைகளின் உட்புகுந்தும் அருவிகளுட் குடைந்து சென்று இன்பம் பெறுக!
6. படுகையில் நெடுங்கிடையாக ஓடும் ஆற்று நீரிலும் நீந்தி மகிழ்க!
7,8. மேற்காட்டியவாறு கொள்ளும் இயற்கையீடுபாடு மன விரிவையும், மனச் செப்பத்தையும் உருவாக்குதலின் நம்மையறியாமல் நம்முட் புகும் இழிவான நினைவுகள் அழிந்து போகும் என்க!

உயிரை மலர்த்து!
உணர்வை அகல்செய்!
பயிர்,நீ! கதிர்,நீ!
பழம்பெரும் வான்,நீ!
துயர்கொளும் சிறிய
துகளிலை; நீ,ஓர்
உயிரொளிப் பிழம்பு;
உலக உடம்பு!

பாடல் - 13 உரைக் குறிப்புகள்:
1. உயிரை மேலும் ஒளியுடையதாகச் செய்வதே வாழ்வாகலின் அதனை மலர்ச்சியுறச் செய்க என்றபடி.
2. சென்றதிலேயே செல்லாமல் மற்றதினும் செல்லுமாறு உணர்வை அகலச் செய்க!
3,4. மண்ணில் ஊன்றிய பயிர்போலும், நாமும் உலவும் பயிர் போலவாம் என்க! உலகுக்கு ஒளிதரும் கதிரவன் போல் நாமும் உள்ளொளி சான்ற மாந்தக் கதிர் என்க! வானிடை நின்று நீந்தும் உலக உயிர் நாம் ஆகலின் நாமும் வானே போலும் என்க!
5,6. நாம் அலைவுற்றுத் துன்புறும் நுண்சிறு துகளில்லை.
7,8. ஒளி சான்ற உயிர்ப்பிழம்பு! உலகம் போலும் நாமும் ஓர் உடம்புலகம்.

சிற்றிறை வன்,நீ!
சிந்தனை வெள்ளம்!
அற்றிடாப் பிறவி!
அறிவுக் கொழுந்து!
வற்றிடா ஊற்று;
வளர்பெரும் புடவி!
குற்றிடா நெற்று!
கோடிக் குமுகம்!

பாடல் - 14 உரைக் குறிப்புகள்:
1. உலக மூலக்கூறாம் இறைமைப் பொருளினின்று தோன்றிய நாமும் சிறிய ஓர் இறைமைப் பொருளே என்க.
2. நாம் ஓர் எண்ண நீர்ப் பெருக்கு!
3. இவ்வுடம்போடு கூடிய இவ்வுயிர்ப் பிறவி இத்துடன் அற்றுப் போவதன்று; தொடர்ந்து பிற உயிர்த் தொடர்ச்சியையும் உண்டாக்குவது.
4. அறிவுச் சுடர் வீசும் உயிர்க் கொழுந்து நாம்.
5. எப்பொழுதும் வற்றாத அறிவு ஊற்று நாம்! (நீரூற்று வற்றிப் போவது போல் நம்பாலிருக்கும் அறிவூற்று எக்காலும் வற்றாத தன்மைத்தாகலின் அஃதுடையேம் என்க.)
6. மேலும் மேலும் விரிந்து கொண்டே வளர்ந்து பெருகும் புடவி போன்ற உயிர்ப் பிறவி நாம்.
7,8. குற்றப்படாத நெற்று விதை போலும் நாம் உலக நல விளைவுக்கான நல் வித்து. முன்னோன் ஒருவனினின்று தோன்றிய நாமும் பின்னே ஒரு குமுகத்தை உருவாக்கும் திறன் படைத்துள்ளோம் என அறிக!

சிறுமையை எண்ணிச்
சிறுத்துப்போ காதே!
வெறுமையை நினைந்து
வெயர்த்தழி யாதே!
குறுமை நினைவுகள்
குறுமையாம் வாழ்க்கை!
நறுமை நினைவுகள்
நல்லொளிப் பிறவி!

பாடல் - 15 உரைக் குறிப்புகள்:
1,2. கீழ்மை நினைவுகள் கீழ்மைப் படுத்துவவாகலின், அவை நம்மைப் பயனற்ற சிறியேமாக்கி விடும் என்க.
3,4. பயனற்ற வெற்று நிலைகளில் மனத்தைப் பதித்து அதற்கென ஏங்கி வெம்பிப் புழுங்கி மனம் வெயர்த்து அழிவுறாதிருப்போமாக!
5,6. குறுகிய நோக்கும், எண்ணமும் வாழ்க்கையைக் குறுக்கிக் கீழ்நோக்கித் தள்ளுமாகலின் அவ்வெளிதாந் தன்மையை நாமும் அடையாது நம்மினின்று நீக்குவோமாக!
7,8. நறிய நல்லெண்ணங்களுக்கான பிறப்பை நல்லொளி பெறச் செய்ய வல்லதாகலின் அவற்றில் நம் மனத்தைப் பதித்தல் வேண்டுமென்க.

உண்மை வலியது!
உள்ளமும் வலியது!
திண்மை தருவதும்
தேர்வதும் அதுதான்.
மண்மேல் அனைத்தும்
மடிந்துமட் குவன!
எண்மேல் எண்ணிய
ஒருவனாய் இரு,நீ!

பாடல் - 16 உரைக் குறிப்புகள்
1. ஆற்றல் சான்றது உண்மை.
2. அந்த ஆற்றலை உள்ளமும் பெற்றிருக்கிறது. (நம் உள்ளமும் உண்மையை உள்ளார்ந்து பெறுமானால் நாமும் ஆற்றலுடையேமாய் மாறுவோம்.)
3,4. தகைமை நிலைகளில் திண்மையைத் தருவதும், நல்லது தீயது ஆய்ந்து பார்த்து நன்மையைத் தேர்வதும் அந்த உண்மை சான்ற உள்ளந்தான் என்பதறிக.
5,6. மற்று, இவ்வுலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் மட்கி அழிவனவாகவே உள்ளன.
7,8. ஒருகால் அழியுந் தன்மையை உடைய இவ்வுலகில் அழியாது நிற்பது புகழாகலின், அப்புகழால் நிலைப்பேறு பெற்றிருக்கும் சான்றோரின் எண் வரிசையில் மேலும் எண்ணப் பெற்ற ஒரு சான்றோனாக நாம் விளங்குதல் வேண்டும் என்க.

புன்மை சிறியது!
பொய்மையும் சிறியது!
புன்மேல் பனித்துளி
போலும் உடம்பதன்
மின்போல் வாழ்க்கையில்
மீந்துவ துயர்வே!
புன்மையும் புரையும்
பொக்கன; புதைவன!

பாடல் - 17 உரைக் குறிப்புகள்:
1. புல்லிய மனத்தன்மை ஆற்றல் நிலையினும், வினை நிலையினும் மிகவும் சிறுமையுடையதாகும்; இழிந்ததாகும்.
2. அப்புன்மைத் தன்மை போன்றே பொய்மைத் தன்மையும் சிறுமையுடையதும், இழிந்ததும் ஆகும்.
3-6. காலத்தாலும், சூழ்நிலைத் தகவாலும் புல்லின்மேல் வந்து பொருந்திய சிறிய பனித்துளி போல, உயிரை வந்து சார்ந்திருக்கும் இவ்வுடம்பொடு கூடிய வாழ்க்கையும் மின்னல் போலும் விரைந்து தோன்றி மறையக் கூடியதேயாம்! இவ்வாழ்வு உண்மை சார்ந்த உள்ளதொடு தக அமையப் பெற்றால் மீதமாவது என்பது உயர் பயன் ஒன்றுமே!
7,8. புல்லிய மனத்தன்மையும், மனப் பொய்ம்மையும் விரைவில் மாயக் கூடியனவாகும்! புதைந்து போவனவாகும். எனவே அவற்றைக் கைக்கொள்ளற்க என்றபடி.

தருக்குகொள் ளாதே!
தன்முனைப் பகற்று!
செருக்குச் சேற்றினில்
சிதைந்தவர் பலபேர்!
உருக்குலைத் திடும்,அது;
உன்னையும் உம்மையும்!
திருக்குலைத் திடும்,அது;
தீமையும் விளைவிக்கும்!

பாடல் -18 உரைக் குறிப்புகள்:
1. தான் ஒருவனே இந்நிலைக்கு வாய்த்துள்ளதாக என்றும், எதிலும் அறிவுச் செருக்கும், வினைச் செருக்கும், மனச் செருக்கும் கொள்ளாதிருக்க!
2. தன்முனைப்பு எண்ணங்களை மனவறையினின்றும் அப்புறப்படுத்தி விடுக!
3,4. அகந்தை கொண்டு அஃதால் வரும் மகிழ்வொடு தன்னிலையினின்று இழிந்தும் அழிவுச் சேற்றில் தள்ளப்பட்டுச் சிதைந்து போயினார் இவ்வுலகத்துப் பலராவர்.
5,6. அம் மனச் செருக்கு நம்மின் பண்புருவைக் குலைத்தழிப்பது; அழிப்பதோடு, நம்மைச் சார்ந்தோர் எவராயினும் அவர்க்கும் அழிவு தர வல்லது!
7,8. மேலும், அது நம்பால் உள்ள வேறுபாடற்ற நடுநிலைத் தன்மையால் அமைந்திருக்கின்ற அக அழகைக் குலைப்பதோடு, தீங்கையும் விளைவித்து விட வல்லதாகும். (திரு என்பதற்குச் செல்வம் என்னும் பொருள் உண்மையின், அச் செருக்காந்தன்மை நம்மின் பொருட் செல்வத்தையும், அறிவுச் செல்வத்தையும் மற்றும் செல்வ நிலைகளாகக் குறிக்கப் பெறுவன வேறு எதனையும் குலைத்தழிக்கும் என்றும் பொருள் கொள்க!)

உலகுக் குரியனாய்
உன்னை உயர்த்திடு!
உலகுக் குரியராய்
உயர்த்து மாந்தரை
கலகக் கொள்கையில்
கால்கோ ளாதே!
விலகப் பயில்,நீ!
வீணுரை வீணரை!

பாடல் - 19 உரைக் குறிப்புகள்:
1,2. இவ்வுலக மக்களுக்கு நாம் உரிமையினம் என்னும் பரந்த பெருமனத்தை உடையேமாக உயர்த்திக் கொள்ளுக! (நாம் சிற்றிறைவரும் உலக உடம்பரும் அல்லமோ?)
3,4. அந்நிலைக்கு உயர்த்திக் கொண்டால் மட்டும் போதுவதோ? நம் இனத்தாராகிய இவ்வுலக மாந்தர் அனைவரையும் அதே போன்று மாந்த நலத்துக்குத் தாமும் அத்தகையரே என்னுமாறு உயர்த்துதல் வேண்டும். (அவர் தந்தமக்குரியராய் தந்தலச் சேற்றில் சிக்கியுழல்தலான் அவர்களையும் அந்நிலையினின்றும் மீட்க வேண்டும் என்றவாறு.)
5,6. கெடும்பையும் குழப்பத்தையும் உருவாக்கி மக்கள் நலந்தீய்க்கும் எக் கொள்கையிலும் சென்று பொருந்தற்க!!
7,8. வெறுமையான உரைகளை நீளப்பெய்து, நம் அரிய நேரத்தையும் ஆற்றலையும் வீண்டிக்கும் தகவிலா வீணர்களிடமிருந்து விலகி நிற்கப் பயின்று கொள்க!

மாந்த ஒளி,நீ!
மந்த விலங்கில்லை!
ஏந்தல் எனநட!
இளைத்தும் தலைநிமிர்!
காந்தப் பார்வையால்
மக்களைக் கவர்ந்திழு!
சேந்து,அவர் நினைவை
செம்மை நினைவுவார்!

பாடல் - 20 உரைக் குறிப்புகள்:
1,2. ஒளியார்ந்த மாந்த உயிரோம் நாம்! அறிவிலும் மனத்திலும் கீழ்ப்பட்ட விலங்கு அல்லேம்; நம் பிறப்பும் தோற்றக் கரணியமும் உயர்ச்சி நோக்கியது!
3. எனவே, மாந்த உயிரிலேயே உயரியவர் நாம் எனும் பெருமிதத்தோடு நடையை மேற் கொள்க!
4. பொருளாலும், உருவாலும் இளைத்துப் போகும் சூழல் வந்து நேரினும், அதுபோதும் நாம் தலை நிமிர்ந்தே நிற்றல் வேண்டும்.
5,6. காந்தம் போலும் ஈர்ப்புப் பார்வையால் மாந்த இனத்தைக் கவர்ந்து நம் வழியில் செலுத்துவோமாக!
7,8. தகவிலாப் பிறரின் தாறுமாறான நினைவுகளையெல்லாம் அவர் மனத்தினின்று சேந்திப் புறத்தெறிவோமாக. மேலும் அவரின் நெஞ்சக் குளங்களில் செவ்விய நல்லெண்ணங்களை வார்த்து நிரப்புவோமாக!

அறிவொளி விளக்கால்
அவர்விளக் கேற்று!
செறிவுரை பகர்ந்திடு!
செழிக்க அன்புசெய்;
முறிவுரை பகரேல்!
முகவுரை கீழ்மை!
வெறியுணர் வடக்கு!
வீம்பறி யாமை!

பாடல் - 21 உரைக் குறிப்புகள்:
1,2. செறிந்தொளிரும் அறிவு விளக்கால், அவர்பால் அமைந்திருக்கின்ற அறியாமையிருள் கப்பிய விளக்குகளை ஏற்றி ஒளி பெறச் செய்க.
3. அறிவார்ந்தவும், நுண்மையும், செறிவும் சார்ந்தவுமான பயன் விளைக்கும் உரைகளையே நிகழ்த்துக.
4. நம்மை அண்டியோர் எவர்பாலும் அவர்கள் உள்ளமும் மனமும் இன்பத் துய்ப்பான் செழிப்புறுமாறு அன்பைப் பொழிக! (எல்லா அறிவு நிலைகளையும் பிணைப்பதும், வளரச் செய்வதும் அதுவாகலான்)
5. நெருங்கிப் பேசுவோர் இணைவு முறிவுறுமாறு பிரிப்புணர்வு புலப்படும் பசையற்ற உரையை எக்காலும் எவர்பாலும் தவிர்க்க!
6. பிறர் மகழ வேண்டும் என்பதற்கெனத் (தன்னலவுணர்வால்) போலி முகமனுரை செய்தல் கீழ்மையானதெனவே அதை முற்றுந் தவிர்க்க!
7. உள்ளத்திற்கும் உடற்கும் கிளர்ச்சியூட்டித் திமிர்ந்தெழ வல்லவான வெற்று மிகையுணர்வுகள் தோன்றாவாறு அவற்றை அறிவான் கட்டுப்படுத்தி யடக்குக!
8. வீம்பு - வீண்பெருமை; செருக்குடன் கொள்ளும் அறியாமை மனவெழுச்சி; ஆரவார முனைப்பு.

உரையால் உரைபெறு!
உவகையால் ஒளிசேர்!
புரைசொல் இழக்கு!
போலிமை வினைதவிர்!
திரையிட் டிராதே!
தீமையைத் துணிந்துகொல்!
வரையறு போக்கை;
வாழ்வைக் காதல்செய்!

பாடல் - 22 உரைக் குறிப்புகள்:
1. நாம் பேசும் உரையின் நல்லுணர்வும், நல்லறிவும் அளவானே பிறர் எதிர்வுரையும் இருக்குமாகலின், நாம் பேசும் முதலுரையின் தொடுப்பைச் சிறந்ததாக்குக என்பது.
2. ஒழுக்கம், நேர்மை, உண்மை, அறிவு இவற்றின் வழி விளைந்துள்ள மனக்களிப்பால் நம்மைச் சார்ந்து வரும் அந்நிலைகளைப் பற்றி ஒளி பெறுகின்ற நிலைக்குச் சான்றினனாக இருக்க!
3. பயனில் கொடுஞ்சொற்கள் தீங்கையும், இழுக்கையுமே விளைக்கும்.
4. உண்மைக்கு மாறான வெற்றாரவார வினைப்பாடுகளை எக்காலும் தவிர்க்க!
5. அறிவாற்றல்களைப் பிறர்க்கும் வழங்கிப் பயன்படுமாறு செயாது அவற்றிற்குத் திரையிட்டு அமைந்து பயனின்றிக் கிடத்தல் கூடாதென்க. (திரைக்குள் மறைந்தபடி செய்யும் தீவினைகளைத் தவிர்க்க எனினுமாம்.)
6. தீமைகள் எங்கு எவரால் எவரிடத்து நிகழ்த்தப் பெறினும், அங்கு அதனை அக்காலே துணிவொடு எதிர்த்தழிக்க!
7. வினையையும் அதன் போக்கையும் பொருள், கருவி, காலம், இடம், பயன் இவற்றொடு தொடர்பு படுத்தித் திட்டவட்டமாக ஆய்ந்து நிரல் படுத்துக!
8. மாந்த வாழ்க்கை ஒரு பேறும், உயர்ந்ததும் உயிர் மலர்ச்சிக்காகவும் அமைந்ததாகலின் அதை நன்குத் துய்த்திட வேண்டி அதன்பால் பேரன்பும் பேரீடுபாடும் கொள்க! (வாழ்வை எந்நிலையிலும் வெறுத்தலும், துறத்தலும் கூடாது என்பதாம்.)

கலைபயில்; எண்பயில்;
கவினிலக் கியம்பயில்!
சிலைபயில்; வண்ணச்
சித்திரம் எழுது!
அலைபயில்; கலம் பயில்!
அளாவும் விண்பயில்!
உலைபயில்; உடல்பயில்;
உன்னை நீ,பயில்!

பாடல் - 23 உரைக் குறிப்புகள்:
1,2. வாழ்க்கையமைப்பிற்கும் போக்கிற்கும் பயனும் எழிலும், சுவையும் ஊட்டுகின்ற எல்லாக் கலைகளையும் பயின்று கொள்க! எல்லா நடைமுறைகளுக்கும், அகத்தியமான கணக்கியல் அறிவைப் பயின்று கொள்க! ஒழுங்கையும் செப்பத்தையும் செழுமையையும் கூட்டுவிக்கின்ற எழிலார்ந்த அறிவு இலக்கியங்களைப் பயின்று கொள்க!
3,4. சிலை வடிக்கும் அரிய கலையை (சிற்பக் கலையை)ப் பயின்று கொள்ளுக! அழகிய வண்ண ஓவியங்களை வரைந்து வரைந்து பயில்க!
5. அலையிடை நீந்திப் பயிலும் கட்டுமரம், படகு, கப்பல் போலும் நீர்க்கலங்களை இயக்கப் பயிற்சி பெறுக!
6. அண்டப் பரப்பில் அளாவிப் புடை விரியும் கோள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பற்றிய அறிவைப் பயில்க!
7,8. சமையல் என்பது பெண்டிர்க்கேயுரிய தனிக் கலையாகக் கருதி ஒதுக்கி விடாது அக்கலையிலும் தேர்ச்சியுடையவனாகுக! உடலோம்பல் என்பது உயிரோம்பல் ஆதலின் அதற்கான பயிற்சியை வாழ்வு முழுமையும் தொடர்ந்து மேற்கொள்க! அவற்றொடு, நாம் யாரென நம்மையே அறிந்து கொள்க! (இப் பயிற்சி மெய்யறிவியல் பற்றிய கல்வியாலும், உணர்வாலும் மட்டுமே கைவரப் பெறுவதாகும்.)

விளங்கிய செல்வம்
வினைபடு கருவி!
வளங்களைப் பகிர்ந்துகொள்!
வயல்விளை வறிவு!
உளங்கொள ஈத்துண்!
உவகையே ஈகை!
களங்கல் விக்கமை!
கனவிலும் கேள்விகொள்!

பாடல் - 24 உரைக் குறிப்புகள்:
1,2. விளக்கம் பொருந்தி பெரிதாய் உலகோரால் மதிக்கப் பெறும் பொருட்செல்வம் இவ்வுலகில் அவ்வவரும் வினைப்படுவதற்கென்றுள்ள கருவியேயாகும். அதனை வெறும் வழிபாட்டுக்குரியதாக எண்ணலாகாது.
3. முயற்சியாலும் சூழலாலும் வந்து வாய்க்கும் செல்வ வளங்களை, அவை வாயாத் தகுதியினரிடையே அவற்றைக் கலந்து பகிர்ந்து கொள்ளுக!
4. அறிவு, வயல் விளைவைப் போன்றதாகும். (பயிர் விளைச்சலில் ஒரு வித்தினின்று பல்வித்துகளை விளைத்தல் போலும் ஓர் அறிவு வித்தூன்றல் பல அறிவு வித்துகளின் பெருக்கத்திற்கு மூலமாகுதலாலும் வேளாண்மை பகிரப் படுதலாலும் அறிவு வயல் விளைவு போன்றதாகும் என்க.)
5. உள்ளம் விரும்பி பிறர்க்கு ஈந்து அவரொடு உண்டு மகிழ்க!
6. உவகையென்பது பிறர்க்கீதலால் ஏற்படும் உள்ளக் களிப்பன்றிப் பிறிதில்லை; எனவே, ஈத்துவக்க!
7. எவ்வகைச் சிறப்புக் கல்வியிலும் நுழைந்து நம்மால் வெற்றி காணவியலும் என்பதை நன்கு அறிந்தாய்ந்து அவ்வத் துறைகளுக்காகும் கல்விக் களங்களை அமைத்துக் கொண்டு அவற்றில் ஈடுபடுக!
8. பிறர் கூறும் பயனுரைகளை நேரிலன்றிக் கனவிலும் உணர்வை அதில் ஊன்றிக் கொள்க என்றபடி. கேள்வியறிவை எவ்விடத்திலும் மிகுக்க என்றவாறாம்.

சிறக்கச் செய்திடு!
சிறப்பூண் சிறிதுண்!
உறக்கம் மிகுதவிர்!
ஓய்வுளக் கிளர்ச்சி!
மறக்க மறப்பன!
மதிப்பன மதி;மகிழ்!
துறக்க, துறப்பன!
துய்ப்புயிர் வாழ்க்கை!

பாடல் - 25 உரைக் குறிப்புகள்:
1. எவ்வினையையும், சிறப்பாகவும், முழுமையாகவும், செப்பமாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும் செய்க!
2. அளவிற் குறைவெனினும் ஆற்றல் செறிந்த உணவாகத் தேர்ந்து உண்க!
3. தேவைக்கு மேலான நீளுறக்கத்தைத் தவிர்க்க! (மிகுவுறக்கம், உடல் நலத்திற் கேலாததானும், காலக் கேடாக்குதலானும் அது தவிர்க்கவென்பதாம்)
4. ஓய்வை முறையாக எடுத்துக் கொள்ளுதல் உள்ளத்தை எக்காலும் கிளர்ச்சியும், எழுச்சியும், சுறுசுறுப்பும் உடையதாக வைத்துக் கொள்ளப் பயன்படும்.
5,6. மறக்கத் தக்க எவற்றையும் உடன் மறப்பதோடு, மதிக்கத்தக்க எதற்கும் உரிய மதிப்பைத் தருக!
7,8. நேரிய வாழ்க்கைப் போக்குக்குத் தேவையற்ற, அல்லது மிகுவாக வேண்டப்படாது நீங்க வேண்டியதும், நீக்க வேண்டியதும் எவையெவையோ அவ்வவற்றைத் துறக்க!

ஓம்புக நல்லுடல்;
உயிர்க்கது ஊர்தி!
சோம்பல் இறப்பு!
சுறுசுறுப் பியக்கம்!
தீம்பர் இணைதவிர்!
தேனினும் அளவுகொள்!
தேம்பல் கோழைமை!
திறலொடு துணிந்திரு!

பாடல் - 26 உரைக் குறிப்புகள்:
1,2. தூய்மையும், வலிமையும், தோற்றமும் ஆர்ந்ததாக உடம்பைக் கவனித்துக் காத்தோம்பிக் கொள்ளுக! ஏனெனில் வாழ்வு வழியைக் கடக்க நம்முயிர் இவர்ந்தேறியிருக்கின்ற ஊர்தியாக அஃது இருத்தலான்.
3,4. சோம்பல் தன்மையென்பது ஒரு வகையில் இறப்புப் போல்வதே! அயர்வின்றி நிலைக்க, ஒன்றில் முழுமையாக யீடுபடும் வினைக்குத்தான் இயக்கம் என்று அறிக!
5. எவ்வகையிலோ எவர்க்கோ எவரேனும் எப்பொழுதும் கெடும்பும் தீங்கும் விளைக்கினும் அன்னவரைத் தெரிந்து, உடன் அவரொடு கொண்ட தொடர்பைத் தவிர்த்துக் கொள்க!
6. உண்ணக் கிடைத்தது தேனேயாயினும், அதிலும் அளவொடு உண்பாயாக!
7,8. எந்நிலையிலும் எத்தகையத் தோல்வி ஏற்படினும், அதற்காகக் கலங்கிக் குமுறும் உளவெம்பலுக்குத்தான் கோழைமை என்று பெயர். (அதை விலக்குக!)

நகைநட் பன்று;
நன்னட் பறிந்துதேர்!
பகைமுன் விலகு!
பார்வையிற் கூர்மைகொள்!
மிகைதவிர் எதிலும்!
மெப்புரை தப்பு!
புகைநெருப் பாகும்!
பொய்வளை விழையேல்!

பாடல் - 27 உரைக் குறிப்புகள்:
1,2. நகையாடுதல் ஒன்று மட்டுமே நட்பாகாது. நல்ல நட்பு எது, தீ நட்பு எது என்று நன்கு ஆய்ந்தறிந்து தேர்ந்த பின்றை நட்புக் கொள்க!
3. பழகுவோரிடம் உருவாகும் மன வேறுபாடுகள் வளரத் தொடங்கி, காழ்ப்புக்கு ஊற்றம் தந்து பகையாகப் பழுக்கு முன்னரே பதமாக விலகிக் கொள்க!
4. பார்க்கப்படும் பொருள்களின் தன்மை முற்றும் ஒரே பார்வையில் விளங்குமாறு கூர்மை நிறைந்த நோக்கினனாக இருக்க.
5. எந்தவொன்றிலும் அளவு மீறல் என்பது கேட்டுக்கு அடி கோல்வதாகலின் அவ்வவற்றிலும் அளவு மிகாவாறு கட்டுப் படுத்திக் கொண்டியங்குக!
6. மெப்புக்கு உரைக்கப் பெறும் மெலுக்குப் போலியுரைகள் தவறு செய்தற்கு இடந்தருவனவாகலின் அவற்றைத் தவிர்க்க!
7. புகை மிக மிக, அப்புகையிருந்து இடம் நோக்கி நெருப்பு அண்மிக் கொண்டிருத்தலை உணர்க! (எதனினும் எச்சரிக்கை வேண்டும் என்பது பற்றியாம்.)
8. பொருட்கெனப் பொய்ந்நட்புப் பாராட்டும் போலியராம் பொது மகளிரால் உடல் நலக்கேடும், பொருளழிவும், வாழ்வழிவும், நிலையிழிவும் நேரும். ஆதலால் அன்னோரை ஒருகாலும் விரும்பற்க!

பொழுதெழு முன்னெழு!
பொழுதொடு துயில்சேர்!
பழுதுறங் கின்மை!
பனிநீர் நிதங்குளி!
தொழுது பெறாதே!
தூய்மை உடையணி!
விழுதெனத் துணையிரு!
வீறுவிந் தடக்கம்!


பாடல் - 28 உரைக் குறிப்புகள்:
1. கதிரவன் எழுதற்கு முன் வைகறைப் பொழுதிலேயே உறக்கத்தினின்றும் விழித்தெழுக!
2. நேரத்தொடும் இராக்காலத்தில் முறையாகத் துயில் கொள்ளுக!
3. காலத்தோடும் முறையோடும் இராப் பொழுதில் துயில் கொள்ளாது வினையிடை யீடுபடல், உடல் நலக்கேட்டைத் தருவதன் வழி வாணாட் குறுமையையும், வலிவிழப்பையும் ஒரு சேரப் போர்த்து விடுமாகலான், அப்பழுது நேராதவாறு இராத்துயில் கெடுதல் தவிர்க்க.
4. பனிபோலுங் குளிந்த நீரில் அன்றாடம் குளிக்கும் வழக்கத்தை மேற்கொள்க. உடல் தூய்மைக்கும், அரத்த வோட்டப் பெருக்கிற்கும் சுறுசுறுப்புக்கும், உறுதிக்கும் அதுவே ஏற்றதென்க.
5. எப்பொருளையும் எவரிடமும் எங்கும் பணிவாக வணங்கி வேண்டிப் பெறற்க! (காலையெழுச்சிக்கும் நீர்க் குளியலுக்கும் அடுத்து இது கூறப் பெறுவதால், இறைவனையும் ஒன்றைப் பெற வேண்டும் என்னும் நசையால் தொழுதல் செய்யற்க என்றும் பொருள் கொள்க.)
6. தூய உடை மதிக்கத் தகுந்த தோற்றப் பொலிவிற்கும் நலத்திற்கும் வழியமைப்பதாகலான் அத்தகைய உடைகளையே உடுத்துக!
7. எந்நல்வினைக்குத் துணையாக விரும்பினும் விழுதுபோல் ஊன்றுதலும் உறுதியும் கொண்டு நிற்க!
8. ஆண் மகனொருவற்கு வலிவும் பொலிவும் ஏற்படுவது அவனின் விந்தடக்கத்தின் பயனே!

பொருந்துணா விருந்து!
புறவுணா முதுபிணி!
அருந்தலும் அளவுசெய்!
ஆசை அடக்கியாள்!
திருந்துதல் வாழ்க்கை!
தெறுநோய் முன்தவிர்!
மருந்துணல் தீது!
மணிநீர் மருந்து!

பாடல் - 29 உரைக் குறிப்புகள்:
1. ஒருவரின் உள்ளத்திற்கும் உடலுக்கும் ஏற்ற உணவு எதுவாயினும் அதுவே அவற்கு விருந்துணாவாம்.
2. உடற்கும் உளத்திற்கும் ஒவ்வா எவ்வுணவும் முடிவில் பெரும்பிணி தருமாதலால் அது தவிர்க்க!
3. குடிப்பெனினும் அளவு கொள் என்பதாம்.
4. மனவிருப்பத்தை அறிவால் கட்டுப்படுத்தி ஆண்டு முறைப்படுத்திக் கொள்க!
5. வாழ்க்கை என்பது நாம் திருந்துதற்கென்றே வந்து வாய்த்த கூறாகலின் நாளும், பொழுதும் தவறான போக்குகளைத் திருத்திக் கொண்டேயிருத்தல் வேண்டும் என்க.
6. துன்பத்தை விளைக்கின்ற நோய் வரும் முன்னரே அதன் குறிப்புகளை உன்னிப்பாய்க் கண்டறிந்து தக்க முறையால் அது வராமல் தடுத்துக் கொள்க.
7. மருந்துண்ணும் நிலைக்கு நோயை முற்ற விடுதலும் மருந்தை உணாப் போல் தொடர்ந்துண்ணலும், உடலுக்கு ஊறு விளைவிக்க வழி கோலுவதேயாகும்.
8. பளிங்குப் போலும் தூய நீரும் ஓர் அரிய மருந்து போல்வதே! எனவே நோயிடை வெறும் நீரே உண்டும் பருவுணாக் கொள்ளாதும், நோய் நீக்கிக் கொள்க!

பொதுமை உலகிது;
பொதுமை வாழ்விது;
பொதுமை உயிர்நலம்;
பொதுமையே இயக்கம்!
பொதுமைஉன் எண்ணம்;
பொதுமைஉன் வினைகள்;
பொதுமையால் ஆக்கு,உனை!
புதுநலங் காண்பாய்.

பாடல் - 30 உரைக் குறிப்புகள்:
1. இவ்வுலகம் பொதுமை நிலை உடையது.
2. எனவே இவ்வுலக மக்களின் வாழ்வும் பொதுமையதே!
3. உலக மாந்த வுயிர்களின் ஒட்டு மொத்த நலமும் பொதுமைக்கென வுள்ளதே!
4. இவ்வுலக மாந்தர்களின் இயக்கங்கள் யாவும் பொதுமைக்கென இயங்குவதற்கே உள்ளன!
5. நம்மில் நல்விளைவெடுக்கும் எல்லா உள்ளெண்ணங்களும் பொதுமை சான்றனவே!
6. நாமும் ஓர் உலக உறுப்பாதலான், நம் வினைகள் யாவும் பொதுமைக்கென விருப்பனவே!
7. எனவே நாம் நம்மைப் பொதுமையராக ஆக்கிக் கொள்ளுதல் வேண்டுவதாகும்!
8. அதுபோதுதான் ஒரு புதிய, தேவையான, சிறந்த நன்மையை இவ்வுலகிலும் நம்முள்ளத்திலும், அறிவிலும் காண்போம். எனவே, பொதுமையாய் எண்ணிப் பொதுமையாய் இயங்கிப் புதுநலம் பெறுவாயாக! (முற்றும்)